அரசுகள் சரியாக வேலை செய்தால் ஈபிஎஸ் சிறைக்கு செல்வார்… புகழேந்தி ஆவேசம்…

மத்திய மாநில அரசுகள் கடமையை சரியாக செய்தால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, மிரட்டல்கள் உள்ள தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இனி வரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி குறித்து அன்புமணி ராமதாஸ், சீமான் பேசிய வீடியோக்களை காண்பித்த புகழேந்தி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈபிஎஸ் சிலரோடு கூட்டு வைத்துக்கொண்டே தேர்தலில் போட்டியிடவில்லை என்று குற்றம் சாட்டினா்.

கூட்டணியில் சேராமல் மாறாமல் இருக்கும் காரணத்தால்தான் சீமானிடம் கூட்டம் சேர்வதாக தெரிவித்த அவர், தற்போது சீமான் தன்னிலை மாறி ஈபிஎஸ் ஆதரவை தேடுவதாக கூறினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயல‍லிதா பெயரை சொல்லியே பாமகவும் அன்புமணி ராமதாஸும் வாக்கு சேகரிப்பதாக தெரிவித்தார்.

ஆனால், ஜெயல‍லிதாவை ஊழல்வாதி என்று திட்டியவர்கள் எல்லாம், தற்பது அவரது பெயரை சொல்லித்தான் ஓட்டு கேட்பதாக தெரிவித்த புகழேந்தி, அதற்கு ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் ஆதரவு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

எம்ஜிஆரும், ஜெய‍ல‍லிதாவும் போட்டியிட்ட தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒற்றை இலக்கில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னமும் போய்விடும் என ஆரூடம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை தேடி போக மாட்டேன் என்று உறுதிப்பட தெரிவித்த புகழேந்தி, அதே நேரத்தில், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியுடன் உள்ள தொண்டர்களே விரும்புவதாக கூறினா்.

எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி என்று தெரிந்துகொள்வதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தெரிவித்த புகழேந்தி, இதற்குத்தான் அண்ணாமலை வெளிநாடு சென்று படித்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடியின் அருகில் அமரும்போதே, எப்படி முதுகில் குத்துவது என்று ஈபிஎஸ் பார்த்துவிட்டதாகவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாவற்றையும் அனுப்பி விடுமாறு அண்ணாமலையை கேட்டுக் கொண்டார்.

மத்திய மாநில அரசுகள் தங்களது கடமைகளை சரியாக செய்தால் எடப்பாடி பழனிசாமி சிறைக்குத்தான் செல்வார் என்ற புகழேந்தி, அதன் பின்னர், கட்சியை எப்படி ஒருங்கிணைப்பது என்று நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் கூறினார்.

ச‍சிகலா செய்த தவறாமல், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளதாகவும், ஈபிஎஸ் செய்த‍து யாருக்கும் ஈடு இணையற்ற துரோகம் என்றும் விமர்சித்தார்.