விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தவும் பொது சுகாதார திட்டங்களை செயல்படுத்துதல் குறித்தும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தினை 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சுகாதார விளைவுகளை அடைந்த பின் நிதியினை வழங்கிடும் விதமாக செயல்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரிதிகள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள சுகாதார குறைபாடுகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சுகாதார பேரவைக் கூட்டத்தில் நகர்ப்புற மக்கள் கிராமப்புற உள்ளாட்சி பிரிதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு தங்கள் பகுதி சுகாதார நல திட்டங்கள் மேம்படுத்துதல் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இக்கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட சுகாதார பேரவைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு ஏற்புடைய கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட சுகாதார பேரவையின் வாயிலாக, வெள்ளிமேடுபேட்டை மற்றும் கங்காவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் குடியிருப்புகளும், கிளியனூர் மற்றும் முருக்கேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை அரங்க கருவிகளும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டண மருத்துவ பிரிவு, திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புற்றுநோய்கான சிறப்பு சிகிச்சை மையமும், விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில் சுற்றுசுவர் ஆகிய நலத்திட்டங்கள் ரூ.2.17 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும், வட்டார அளவிலான சுகாதார பேரவை அமைக்கப்பட்டு பேரவை கூட்டங்கள் கடந்த ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு 296 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 29.11.2023 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 296 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, 205 தீர்மானங்கள் மாவட்ட சுகாதார பேரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சுகாதாரத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார்கள். குறிப்பாக, மகப்பேறு இறப்பு விகிதம் தமிழ்நாடு 66 சதவீதம் இருந்துவருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டம் 24.0 சதவீதம் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேலும், குழந்தைகள் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு 17 சதவீதம் இருந்துவருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டம் 8.7 சதவீதம் பெற்றுள்ளது. இதுபோல் பிறப்பு விகிதம் உள்ளிட்ட அனைத்திலும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. எனவே, மாவட்ட சுகாதார பேரவையில் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களின் வாயிலாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு, கட்டமைப்புகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.
மேலும் காண