President Sengol Respect: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த குடியரசு தலைவருக்கு, செங்கோல் கொண்டு வரவேற்பளிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குடியரசு தலைவருக்கு செங்கோலுடன் வரவேற்பு:
நாடாளுமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்னுவின் உரையுடன் தொடங்கியுள்ளது. இதற்காக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இரு அவை உறுப்பினர்களும் கூடியுள்ள அரங்கிற்கு வந்த, குடியரசு தலைவருக்கு செங்கோல் கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இசை வாத்தியங்கள் முழங்க செங்கோலை முதலில் ஒருவர் கையில் ஏந்திச் செல்ல, பாதுகாப்பு வீரர்கள் சூழ, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளே வந்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் முதன்முறையாக வருகை தந்த குடியரசு தலைவரை, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
#WATCH | Budget Session | President Droupadi Murmu arrives at the Parliament for her address to the joint session of both Houses. Sengol carried and installed in her presence. pic.twitter.com/vhWm2oHj6J
— ANI (@ANI) January 31, 2024
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த ஆண்டே பயன்பாட்டிற்கு வந்தாலும், குடியரசு தலைவர் இதுநாள் வரை அங்கு வருகை தராமல் இருந்தால். இந்நிலையில் தான், அடுத்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்றார்.
செங்கோல் பெருமை:
1947-ம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்தது. அப்போது ஆட்சி அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில், பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சோழர்காலத்தில் பின்பற்றப்படுவதை போன்று செங்கோல் வழங்கப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர் பதவி ஏற்கும்போது அவரிடம் செங்கோலை ஆன்மிகத் தலைவர் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே சோழர் கால மாதிரி செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது. அது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு கேலரியில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான், புதியதாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தின் திறப்பு விழாவின் போது, மக்களவை சபாநாயகரின் இருக்கை அருகே அந்த செங்கோல் வைக்கப்பட்டது. அந்த செங்கோலை கொண்டு நாட்டின் முதல் குடிமகளான திரவுபதி முர்முவிற்கு, இன்று நாடாளுமன்றத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் காண