politician pala karuppiah talks about vijays tamilaga vettri kazhagam party | Thalapathy Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு


விஜய்யின் அரசியல் வருகையை தான் வரவேற்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இன்னும் 2 படங்கள் நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவோ, ஆதரவளிக்கவோ போவதில்லை என விஜய் தெரிவித்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என குறிப்பிட்டுள்ளார். 
இப்படியான நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா விஜய்யின் அரசியல் வருகை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இருவரும் இணைந்து அரசியல் படமான சர்கார் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 
பழ.கருப்பையா பேசும்போது, “விஜய் அரசியல் வரவேற்கத்தக்க ஒன்று தான். அவர் தனது அறிக்கையில் நிறைய விஷயங்களை குறிப்பிட்டார். அதனை செய்வார், செய்யமாட்டார் என்பது அரசியலுக்குள் வந்து விஜய் செயல்படுவதை பொறுத்து தெரிந்து கொள்ளலாம். இப்போது தமிழ்நாட்டில் 10, 12 கட்சிகள் உள்ளது. இவை ஒன்று நேரடியாக ஊழல் செய்கின்றன, அல்லது ஊழல் செய்யும் கட்சிகளோடு கூட்டணி வைக்கின்றது. ஆகவே, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் ஊழலை பற்றி பேசுவதில்லை. 
கூட்டணி வைக்கும் போது ஊழல் என்பது என் வாழ்க்கை முறை, அதனை ஏற்றுக்கொண்டு வந்தால் வா, இல்லாவிட்டால் போ என தெளிவாக கூறுகிறார்கள். சரியான நிர்வாகம் இல்லை, ஊழல் நிறைந்திருக்கிறது. இதனை எதிர்த்து போராட இங்குள்ள 10, 12 கட்சிகளுக்கு தயாராக இல்லை என்கிற போது ஒரு புதிய கட்சி வரட்டும். சீமான் ஒருவர் இருக்கிறார் என்றால் அவரின் உளறல் தாங்க முடியவில்லை. அவரின் பேச்சை கேட்க ஆம் என கேட்டுக்கொள்ள கொஞ்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். 
விஜய் சொல்லுகின்ற நோக்கம் நிர்வாக குறைபாடு, ஊழல் போன்றவை ஆளும் கட்சிகள் வேலையாக செய்து வருகின்றது.  இதையெல்லாம் கண்டித்து கேட்பதற்கு ஒரு கட்சி வர வேண்டும். காந்தி சமூகத்தை ஒழுங்கப்படுத்தினார். 1920 முதல் 1970 வரை காந்தி உருவாக்கிய மிகச்சிறப்பான மனிதர்கள் பொது வாழ்க்கையில் இருந்தார்கள். இப்போது உள்ள குறைபாடு என்னவென்றால் இவ்வளவு பேர் பொது வாழ்க்கைக்கு வர வேண்டியது தேவையில்லை. ஊழல் செய்யலாம் என்கிற ரீதியில் வருகிறார்கள். 
மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக கூட்டணி சேரும் கட்சிகள், 5 ஆண்டுகளும் கூட்டணி தலைமை கட்சி செய்யும் ஊழலுக்கு எல்லாம் சப்போர்ட் செய்வது என்ன நியாயம் என நான் கம்யூனிஸ்ட் கட்சிகளை பார்த்து கேட்கிறேன். ஏன் மோடியை எதிர்க்க கூட்டணிக்கு வெளியே நின்னு எதிர்க்க வேண்டியதுதானே? . இதற்கு பி டீம் அரசியல் என்ற புதிய ஒன்றை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். விஜய்யின் அரசியல் வருகையால் இந்த பி டீம் அரசியல் ஒழியும். 
அவர் அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை என்று சொல்கிறார். இந்த வார்த்தைகளை கேட்டு நான் வெகு காலமாகி விட்டது. அதேபோல் பிளவுவாத அரசியல் கலாச்சாரத்துக்கு எதிரானவன் என சொல்வது மோடியை தான் குறிக்கிறது. அதேபோல் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளுக்கு கூடும் மக்கள் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். ஆனால் விஜய்க்கு கூடுபவர்கள் அப்படி அல்ல.
திமுகவை ஒழிப்பதற்கு விஜய் பயன்படுவார் என்றால் அதுதான் என்னை பொறுத்தவரை மிகப்பெரிய தொண்டு என கருதுகிறேன். நீ நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என கருத்து சொல்ல வேண்டும்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link