சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர்கள் தவறாக வழிநடத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, திருவான்மியூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசனை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு உள்ள ஆபத்து, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எடுத்து கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறினார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதை அம்மாநில உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது போன்று, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.
2010 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் சூழல் உள்ளதாக தெரிவித்த அன்புமணி, தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டின் மேல் கத்தி தொங்கிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தால் ஏன் 69% இட ஒதுக்கீடு தொடர வேண்டும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பும் என்றும், இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 69% இட ஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு அளித்ததாக கூறிய அன்புமணி 69% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தால், அன்றே திமுக ஆட்சி கவிழும் என்று எச்சரித்தார். முதலமைச்சரை சுற்றி இருக்கும் அமைச்சர்கள் முதலமைச்சரை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டிய அவர், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேருக்கும் சமூகநீதிக்கும் என்ன தொடர்பு உள்ளது? அவர்கள் அமைச்சர்களே இல்லை வணிகர்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் தரவுகள் இருந்தும் அதனைத் தர ஆணையம் மறுப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி விரைவில் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும்.