PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்


PM Modi Visit 5 States: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்:
இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
இரண்டு நாட்களில் 5 மாநிலங்கள்:
அந்த வகையில், பிரதமர் மோடி  இரண்டு நாட்களில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதாவது, தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு மார்ச் 4 முதல் 6ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.   இந்த 5 மாநிலங்களில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் உரையாற்ற உள்ளார். 
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் நான்காவது முறையாக ஒருநாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.  மகாராஷ்ராவில் இருந்து நாளை புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சென்று ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன்பின், நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில்  நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாடு டூ பீகார் வரை:
நாளை இரவே தெலங்கானா செல்லும் பிரதமர் மோடி, மார்ச் 5ஆம் தேதி காலை 10 மணியளவில்  ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ள விமான  போக்குவரத்து ஆய்வு நிறுவனத்தை திறந்து வைத்து, ரூ.6,800 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளில் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு ஒடிசா செல்கிறார் பிரதர் மோடி. அங்கு சண்டிகோலேயில் 19,600 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி.  
இப்பகுதியில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில்,  பாலசோர்-ஜார்போகாரியா, டாங்கி-புவனேஸ்வர், சண்டிகோலே – பாரதீப் வரை நான்கு வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன்பின், மார்ச் 6ஆம் தேதி காலை 10 மணியளவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சாலை, ரயில், பெட்ரோலியம் போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்ற உள்ளார். 
அதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் பெட்டியா மாவட்டத்திற்கு மதியம் 2.30 மணியளில் செல்லும் மோடி, 8,700 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண

Source link