ஆஸ்கர் விருதுகளுக்கு பார்பீ படத்தின் இயக்குநர் கிரெட்டா கெர்விக் மற்றும் நடிகை மார்கரட் ராபீ ஆகிய இருவரும் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பார்வதி திருவேது.

ஆஸ்கர் 2024

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் கடந்த சில நாட்கள் முன்பு வெளியிடப் பட்டது. வரும் மார்ச் மாதம் இந்த விருது விழா நடைபெற இருக்கிறது. இந்த பரிந்துரைப் பட்டியலில் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் மக்களைக் கவர்ந்த பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாக பெண் இயக்குநர்கள் இயக்கிய மூன்று படங்கள் இந்தப் பட்டியலில் இருப்பது உற்சாகமளிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த பட்டியலில் ஒரு சில பெயர்கள் இல்லாதது ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

பார்பீ

கடந்த ஆண்டு ஒப்பன்ஹெய்மர் படத்துடன் வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்த படம் பார்பீ. கிரெட்டா கெர்விக் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ரயன் கோஸ்லிங் மற்றும் மார்கரட் ராபீ இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பார்பீ திரைப்படம் உலகளவில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனைப் படைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் கிரெட்டா மற்றும் நடிகை மார்கரட் ஆகிய இருவரும் ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த ரயன் கோஸ்லிங் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

தன்னைத் தவிர்த்து தன் படக்குழுவினரின் பெயர்கள் இடம்பெறாதது குறித்து பேசிய அவர் “ பல்வேறு குறிப்பிடத்தக்க கலைஞர்கள் இடம்பெற்ற பட்டியலின் என்னுடைய பெயரும் இடம்பெற்றிருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தில் கேன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு இந்த பெருமை கிடைத்திருப்பது மகிழ்ச்சி, ஆனால் பார்பீ இல்லாமல் கேன் இல்லை. இயக்குநர் கிரெட்டா இல்லாமல் பார்பீ படம் இல்லை. உலகம் முழுவதும் கொண்டாடும் சாதனைப் படைத்த இந்தப் படத்தை உருவாக்கியவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இல்லாதது வருத்தமளிக்கிறது. “ என்று ரயன் கோஸ்லிங் தெரிவித்திருந்தார்.

மனவருத்தம் தெரிவித்த பார்வதி

ரயன் கோஸ்லிங்கின் அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகை பார்வதி திருவேது “ இது எனக்கு வலியை தருகிறது. காரணம் இங்கு ரயன் கோஸ்லிங் போல் யாரும் இருப்பதில்லை. திறமையோ தகுதியோ இங்கு முக்கியமாக இருப்பதில்லை. தங்கள் மதிப்பை உணர்ந்து பேசும் பெண்கள் தொற்றுநோய்களைப் போல் தவிர்க்கப் படுகிறார்கள். இப்படி தகுதியானவர்களை உயர்த்த இப்படி தங்களது குரலை பயன்படுத்தும் நண்பர்கள் இருப்பது மகிழ்ச்சிதான்” என்று கூறியுள்ளார்