கிராம மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் விவசாய பகுதிகளில், நிலம் எடுப்பு தொடர்பாக ஆட்சியபணை கேட்காமல், அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசை கண்டித்து, பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் போராட்டம் அறிவிப்பு
நில எடுக்க முதல் அறிவிப்பு
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 27.7 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர் , புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற எழுத்து முகவரியில் எழுத்து மூலமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் ( parandur airport )
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமம் முழுவதும் அகற்றப்பட உள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடும், நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
ஆலோசனையில் ஈடுபட்ட விவசாயிகள்
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆலோசனை கூட்டத்தை மேற்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நெல்வாய், நாகப்பட்டு, ஏகாம்பரம், தண்டலம், வளத்தூர், மேலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் நோக்கி பொதுமக்கள் மற்றும் கிராமத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் இந்த நோட்டீஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக இன்று பெரிய அளவில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
முற்றுகைப் போராட்டம்
எதிர்ப்பு இல்லாத இடத்தில் முதல் அறிவிப்பை வெளியிட்டு, அரசு நிலங்களை கையகப்படுத்தி பொதுமக்கள் யாரும் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக இப்படி திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனை முடிவில் இன்று நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் போராட்டத்திற்கு தங்களுடைய கிராமத்திலிருந்து டிராக்டரின் மூலம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் காண