Owaisi On Ram Temple : "பகவான் ராமரை மதிக்கிறேன்" நாடாளுமன்றத்தில் மனம் திறந்த அசாதுதீன் ஓவைசி..

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, அயோத்தி ராமர் கோயில் திறப்பை புகழும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் திறப்பு குறித்து தீர்மானம்:

ராமர் கோயில் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "ராமர் பகவான் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன். ஆனால், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை வெறுக்கிறேன்" என்றார்.

பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், "நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக, ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களுக்காகவா அல்லது முழு நாட்டிற்காகவா? இந்த அரசுக்கு சொந்த மதம் இருக்கிறதா? இந்த நாடு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்காகவும் நிற்காது. நிற்கக் கூடாது என்று நான் நம்புகிறேன்

ராமர் கோயில் திறப்பு குறித்த இந்த தீர்மானத்தின் மூலம், ஒரு மதம், இன்னொரு மதத்தை வீழ்த்தி வெற்றி அடைந்துவிட்டது என்பதை அரசு சொல்ல விரும்புகிறதா? நாட்டிலுள்ள 17 கோடி முஸ்லிம்களுக்கு இதைவிட என்ன பெரிய செய்தி அனுப்பிவிடமுடியும்?" என்றார்.

பாஜகவை லெப்ட் ரைட் வாங்கிய ஓவைசி:

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மற்றும் இஸ்லாமிய ஆட்சியாளர்களை தற்போதுள்ள இஸ்லாமிய தலைவர்கள் பின்பற்றுவதாக பாஜக வைத்து வரும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓவைசி, "நான் என்ன பாபர், ஜின்னா, ஔரங்கசீப் ஆகியோரின் செய்தித் தொடர்பாளரா?" என கேள்வி எழுப்பினார்.

மக்களவை சார்பாக தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "ஒரே பாரதம், வளமான பாரதத்தின் பிரதிபலிப்பே ராமர் கோயில்" என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நமது விழுமியங்கள் பற்றி அவர்கள் பெருமைப்படுவார்கள்" என்றார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ராமர் கோயில் விவகாரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் பிரதமர் மோடி அணைத்து சென்றுள்ளார். இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மையின் பிரதிபலிப்பே உச்ச நீதிமன்ற தீர்ப்பு. தங்கள் நம்பிக்கை தொடர்பான விவகாரத்தில் உலகில் எங்கேயும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த அளவுக்கு காத்திருந்தது கிடையாது" என்றார்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு ராமர் கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, கடந்த மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

Source link