Opening Ceremony Of The World’s First Giant Jallikattu Ground In Madurai Keezhakarai Check Facilities | Madurai Jallikattu Ground: மதுரையில் இன்று திறக்கப்படுகிறது உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கம்

Madurai Jallikattu Ground: மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள உலகின் முதல் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கில், வீரர்கள், காளைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை ஜல்லிக்கட்டு அரங்கு:
ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக  தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழா நடைபெறும்.
ஜல்லிக்கட்டு வரலாறு:
தமிழர்களின் பெருமைக்குரிய தொழிலாக பழங்காலத்திலிருந்து திகழ்ந்து வருவது உழவுத் தொழில். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். அத்தகைய உழவுத் தொழிலுக்கு முதன்முதலில் தேவைப்பட்டது “காளை”. அந்நாளில் காடுகளில் திரிந்த காளைகளைப் பிடித்து அடக்கிப் பழக்கி உழவுத் தொழிலில் ஈடுபடுத்தி வந்தனர் தமிழ் மக்கள். அதன் தொடர்ச்சியாகத்தான். மாடு பிடிக்கும் விழா,”ஏறு தழுவுதல்”,”எருது விடுதல்” “மஞ்சு விரட்டு”, ஜல்லிக்கட்டு” எனப் பல பெயர்களில் தமிழ்ச் சமுதாயத்தில் வழிவழியாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது.
திமுக கொடுத்த வாக்குறுதி:
இந்த மாடுபிடி விழாவை. ஒன்றிய அரசு விலங்குகள் வதைச் சட்டத்தின் துணைகொண்டு தடைவிதிக்க முனைந்தபோது, தமிழனின் பண்பாட்டு உரிமை எனத் தன்னெழுச்சியாகச் சீறி எழுந்த தமிழ்நாட்டு இளைஞர்களால், இந்திய உச்சநீதிமன்றமே தடையை விலக்கி அனுமதி வழங்கிய வரவாறு இந்த விழாவின் வெற்றி முத்திரையாகப் புகழ் படைத்தது.
இன்று எட்டுத்திக்கும் போற்றும் இன்பத் தமிழ்த் திருநாட்டின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்று எதிர்க் கட்சியாக இருந்தபோதே மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்த இந்த ஏறுதழுவுதல் விழாவை முன்னின்று நடத்தித் தந்தார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரமாண்டமான ஏறுதழுவுதல் அரங்கு அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அந்த அறிவிப்பைச் செயற்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரங்கில் உள்ள வசதிகள் என்ன?
அதனைத்தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சந்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 18.3.2023 அன்று கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 6,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம்,  ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம். ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களை புலப்படுத்தும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருத்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி – தைத் திங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திவரும் விவசாயிகளுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது. தமிழர் நலம் காப்பதைத் தனது தலையாய பணியாகக் கொண்டுள்ள முதலமைச்சரே,  தமிழர்தம் மகத்தான பண்பாட்டுச் சின்னமாக வடிவெடுத்துள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தினை 24-1-2024 அன்று புதன் கிழமை காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்திற்கு வருகைதந்து திறந்து வைக்கிறார்கள்.
விளையாட்டு களஞ்சியம்:
இதுவரை மதுரையின் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் குறுகலான நெரிசல் மிகுந்த தெருக்களில் ஏறுதழுவுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அது குறித்த மதுரை மாவட்ட மக்களின் இதயங்களில் இருந்துவந்த கவலைகளை அகற்றும் வகையில் எழுந்துள்ளது இந்த அரங்கம்.
இந்தப் புதிய ஏறுதழுவுதல் அரங்கம் தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத் துறையின் வழக்கமான போட்டிகளை நடத்துவதற்கும் பயன்படும்: இந்த மிகப்பெரிய அரங்கம் ஜல்லிக்கட்டு வீரர்களையும் பார்வையாளர்களையும் மிகவும் ஈர்க்கும் வகையில் அலங்காநல்லூர் அருகில் உள்ள மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. புல்வெளிகளும் தோட்டங்களும் கொண்டுள்ள இந்த அரங்கம் ஆண்டுமுழுவதும் சுற்றுலாவிற்குப் பயன்படுவதுடன், ஜல்லிகட்டு நடைபெறாத காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கும் உதவும். தமிழ்ச் சமுதாயத்தின் பழைமையான பண்பாட்டு உரிமையை மீட்டுத் தந்துள்ள, வரவாற்று நிகழ்வை உலகத்திற்கு உரைத்திடும் அடையாளச் சின்னமாகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் திறக்கப்படுகிறது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link