One Nation One Election Ram Nath Kovind High-Level Committee submitted Report and Suggestions


இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல கட்டங்களாகவும், பல்வேறு அமைப்புகளிடமும் நடத்திய கருத்துக் கணிப்புகள் அதையொட்டிய ஆய்வுகள் அடங்கிய 18 ஆயிரத்து 626 பக்க  விரிவான அறிக்கையை ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் இன்று அதாவது மார்ச் மாதம் 14ஆம் தேதி சமர்பித்தது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நாட்டிற்கு பல வழிகளில் பலன்கள் ஏற்படும் எனவும் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளது.  இந்த ஆய்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியில் இருந்து மொத்தம் 191 நாட்கள் நடத்தப்பட்டது. 
இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த விரிவான ஆய்வறிக்கையில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மூன்று அடுக்குகளாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் ஐந்து பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக 2029ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை அமல்படுத்தும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
 


ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் நடத்தப்படவேண்டும். 
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை ஒருங்கிணைப்பது அவசியம். அதன் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் வகையில் குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடவேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் கூடும் நாளை நியமன நாளாக குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடும் நாளில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான பதவிக் காலம் தொடங்கும்.
அறிவிக்கைக்குப் பின் நடைபெறும் தேர்தல்கள் மூலம் நடைபெறும் சட்டமன்றங்களின் ஆயுட்காலம் நாடாளுமன்ற ஆயுட்காலத்துடன் முடிவடையும். 
தொங்கு சட்டப்பேரவை, ஆட்சி கவிழும் நேரங்களில் இடைத் தேர்தல்கள் நடத்திக் கொள்ளவும் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் மீதம் உள்ள காலத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் நடந்தாலும் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும்போது சட்டமன்றங்களின் ஆயுட்காலமும் முடியும். 
முதலில், மக்களவை தேர்தல்கள் மற்றும் மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். 
பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்க வேண்டும்.
ஒரேநாடு ஒரே தேர்தல் நடத்த ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். ஒரே வாக்காளர் அட்டை கொண்டு வருவதில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.  
ஒரே நேரத்தில் எப்போது தேர்தல் நடத்துவது என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காண

Source link