ரயில் பயணம் இந்திய மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக வலம் வருகிறது. ஏதேனும் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் விமானத்திலோ, பேருந்திலோ செல்ல நினைத்து அதனின் விலையை கேட்டால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு டிக்கெட்டின் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது.

ஆனால், ரயிலை பொறுத்தவரை எளிய மக்களும் எந்தவொரு கவலையின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. அப்படி இருக்க, இந்த நாள் ரயில்வேவில் ஒரு சிறப்பான நாள் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? இந்திய ரயில்வே வரலாற்றில் ஏப்ரல் 16ம் தேதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.

1853ல் இதே நாளில், இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. எனவே, இன்று இந்திய ரயில்வேயின் பிறந்தநாள் என்றே சொல்லலாம்.

வரலாற்றில் இன்றை நாள்:

இந்திய ரயில்வேயின் முதல் ரயில் கடந்த 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மாலை 3.35 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலானது அப்போதைய பம்பாயின் (தற்போதைய மும்பை) போரி பந்தர் ரயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் தானே வரை 33 கிலோ மீட்டர் வரை ஓடியது.

இந்த ரயிலில் 14 பெட்டிகள் பொருத்தப்பட்டு, சுமார் 400 பயணிகளுடன் பயணித்தது. இந்த 14 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலை இயக்க சாஹிப், சிந்து மற்றும் சுல்தான் ஆகிய மூன்று நீராவி இன்ஜின்களால் இயக்கப்பட்டது. மேலும், 33.80 கிலோ மீட்டரை கடக்க ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.

இந்த ரயில் 34 கிலோமீட்டர் பயணத்தில் இரண்டு நிலையங்களில் நின்றது. போரி பந்தர் நிலையத்தை விட்டு 8 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, இந்த ரயில் பைகுல்லாவில் நின்றது. இங்கு அதன் இயந்திரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சியோனில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இந்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில், இரண்டு நிலையங்களில் தலா 15 நிமிடங்கள் ரயில் நின்றது.

அதன்பிறகு, சோதனைக்காக அல்லாமல், கடந்த 1854ல் ஹவுராவிலிருந்து ஹூக்ளிக்கு, கிழக்குப் பகுதியில் முதல் பயணிகள் ரயில் (24 மைல்) இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அதே ஆண்டு, பம்பாய்-தானே ஜிஐபிஆர் லைன் இரட்டைப் பாதையாகி கல்யாண் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் ரயில் எப்போது ஓடியது..? மேலும், சில தகவல்கள்..

கடந்த 1835ம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் சோதனை முயற்சியில் சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது.

கடந்த 1837ம் ஆண்டு நாட்டின் முதல் ரயில் ரெட் ஹில்ஸில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை ஓடியது. இது சுழலும் நீராவி இன்ஜின் மூலம் இழுக்கப்பட்டது. இந்த இயந்திரம் ஆர்தர் காட்டனால் உருவானது மற்றும் வில்லியம் அவேரி என்பவரால் தயாரிக்கப்பட்டது. ரயில்வே மூலம் கிரானைட் கல் கொண்டு செல்லப்பட்டது.

இந்தியாவின் ரயில்வே வரலாறு:

கடந்த 1832ம் ஆண்டு இந்தியாவில் ரயில்வே அமைப்பை உருவாக்கும் யோசனை முதன் முதலில் முன்மொழியப்பட்டது. அந்த நேரத்தில்தான் பிரிட்டனிலும் ரயில் பயணம் ஆரம்பமானது. அப்போது, இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஹார்டிங், ரயில் பாதை அமைக்க அனுமதித்தார். இதையடுத்து, "கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே" மற்றும் "கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனம்" 1845 இல் நிறுவப்பட்டது.

சென்னையில் ரயில்வேயின் கதை:

கடந்த 1852ம் ஆண்டு மெட்ராஸ் ரயில் நிறுவனம் நிறுவப்பட்டு, 1856ம் ஆண்டு ராயபுரம்-வாலாஜாவிற்கு இடையே முதல் ரயில் பாதை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, மெட்ராஸ் ரயில்வே நிறுவனம் தனது முதல் ரயில் சேவையை தெற்கில் ஜூலை 1 அன்று ராயபுரம்/வியாசர்பாடி (மெட்ராஸ்) முதல் வாலாஜா சாலை (ஆர்காட்) வரை மேற்கொண்டது. இதில், சோதனை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது தவிர, பயணிகள் யாரும் பயணிக்கவில்லை.