Omni Buses: பொங்கல் விடுமுறை! தாறுமாறாக கட்டணத்தை வசூலித்த ஆம்னி பேருந்துகள் – அதிரடி காட்டிய போக்குவரத்து துறை!

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை  குளிர்சாதன வசதியில்லா பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் என மொத்தம் ஆறு வகையான பேருந்துகள் உள்ளன. பேருந்துகளின் தரம் மற்றும் வசதியை பொறுத்து  பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப்படி பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர்.

அதிக கட்டணம் வசூல் புகார்:

இந்த ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் கட்டணம் வேறு விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களை விட பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். இதனால், பயணிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை தொடர்பாக புகார்களும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் விடுமுறையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”கடந்த தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களை போலவே பொங்கல் விடுமுறை நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து பெரும்பான்மையான ஆம்னி பேருந்துகள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் செயல்பட்டு வந்தாலும் சில பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வன்னம் இருந்ததால் தமிழக முழுவதிலும் கடந்த 10.01.2024 முதல் 21.01.2024 வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

1,892 பேருந்துகளுக்கு அபராதம்:

இந்த சிறப்பு ஆய்வில் மாநிலம் முழுவதிலும் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்கள் ஆகிய அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைவரும் மாநிலம் முழுவதிலும் 15,659 ஆம்னி பேருந்துகள் சோதனை  செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 36,55,414 தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து, அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் 1000 ஆம்னி பேருந்துகளை வரைமுறைபடுத்துவதற்கான காலக்கெடு 31.03.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தகைய ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உடனடியாக தொடர்புடைய மாநிலங்களில் இருந்து NOC பெற்று 31.03.2024-க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்துக் கொண்டு பர்மிட் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளது தேதி வரை சுமார் 550 வாகனங்களுக்கு அந்த அந்த மாநிலங்களில் NOC பெறுவதற்கான Offer Letter தமிழ்நாடு ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் உரிய பர்மிட் இன்றி இத்தகைய வாகனங்கள் இயங்கி வருவதால் தமிழ்நாடு மாநில அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் இந்த வரன்முறை படுத்தும் நடவடிக்கைக்கு ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் உரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

01.04.2024 முதல் பிற மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் இயங்கி வரும் வரன்முறை படுத்துப்படாத எந்த ஒரு ஆம்னி பேருந்தும் இயக்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link