National science day Sir CV Raman history, his finding, his valuable contribution to the field of science


Sir CV Raman Effect: சர் சி.வி. ராமனின் வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு அவரது பங்களிப்பு குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தேசிய அறிவியல் தினம் – வரலாறு:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்புக்கான தேசிய கவுன்சில் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் அறிவிப்பின்படி 1987ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய இயற்பியல் ஆராய்ச்சியாளர் சர் சந்திரசேகர வெங்கட் ராமன் பிப்ரவரி 28, 1928 அன்று ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
இதற்காக, அவருக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக தான்,  ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவரது  வரலாறு, கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உலகிற்கு சர் சி.வி. ராமனின் பங்களிப்பு குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 
சர் சி.வி. ராமன் வரலாறு:
திருச்சியில் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, இரா. சந்திரசேகர் எனும் ஒரு இயற்பியல் ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர் சந்திரசேகர வெங்கடராமன். விசாகப்பட்டினத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1904 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தனது B.A., பட்டப் படிப்பை சிறப்புத் தகுதியுடன் முடித்து, முதுகலை படிப்பையும் அங்கேயே தொடர்ந்தார். அனைத்துப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று,  1907 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிதித்துறை தேர்வில் முதலிடம் பிடித்தார்.
சர் சி.வி. ராமனின் 18ஆவது வயதிலேயே அவரது முதல் ஆய்வு அறிக்கை லண்டன் அறிவியல் இதழில் வந்தது.  கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக அரசு பணியில் சேர்ந்த அவர், அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து, பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட அவர்,  பிறகு தானே நிறுவிய ராமன் ஆய்வுக் கழகத்தில் இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றினார். 1970ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சர் சி.வி. ராமன் இயற்கை எய்தினார். ராமன் விளைவு கோட்பாட்டிற்காக நோபல் பரிசு பெற்ற அவரை, இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. இதைதொடர்ந்து பல்வேறு பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சர் சி.வி. ராமனின் அறிவியல் கண்டுபிடிப்புகள்:
ராமன் விளைவு: ஒரு ஒளியானது ஒரு ஊடகத்தின் (பொருள்) வழியே புகுந்து செல்லும்போது சிதறி அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இந்த ஒளி சிதறலானது அந்த பொருள் கொண்டுள்ள அணுக்கட்டமைப்பை பொறுத்து மாறுபடுகிறது என்பதே ராமன் விளைவு. இந்த எளிய கண்டுபிடிப்பு தான் அணுக்கழிவுகளை தொலைவில் இருந்தே ஆய்வு செய்தல், புற்றுநோய் கண்டறிதல், தோலின் வழியாக மருந்தை செலுத்துதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு, ரத்தகுழாயில் கொலஸ்ட்ரால் படிவதை கண்டறிதல் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய் கண்டறிதலில் பயன்படுகிறது.
இதுபோக, மீயொலி மற்றும் ஹைப்பர்சோனிக் அதிர்வெண்களின் ஒலி அலைகளால் ஒளியின் மாறுபாடு, சாதாரண ஒளியில் வெளிப்படும் படிகங்களில் உள்ள அகச்சிவப்பு அதிர்வுகளில் எக்ஸ்-கதிர்களால் உற்பத்தி செய்யப்படும் விளைவுகள் மற்றும் படிக இயக்கவியலின் அடிப்படை சிக்கல் தொடர்பான ஆய்வுகளையும் சர் சி.வி. ராமன் மேற்கொண்டார்.
சர் சி.வி. ராமனின் அறிவியலுக்கான பங்களிப்பு:
1926 இல் இந்திய இயற்பியல் பத்திரிகையை நிறுவி, ஆசிரியராக இருந்தார்.  இந்திய அறிவியல் அகாடமியை நிறுவுவதற்கு நிதியுதவி செய்தார். பெங்களூரில் உள்ள தற்போதைய அறிவியல் சங்கத்தின் தலைவராக செயல்பட்டுள்ளார். ஒளி ஃபோட்டான்கள் கோண உந்தம் அல்லது சுழற்சியைக் கொண்டிருப்பதை ராமனும் அவரது மாணவர் சூரி பகவந்தமும் கண்டுபிடித்தனர். இசைக்கருவிகளின் அதிர்வெண்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது என, அறிவியல் உலகிற்கு சர் சி.வி. ராமன் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மேலும் காண

Source link