வடகொரியா நடத்திய ஜிபிஎஸ் தாக்குதலால் பல கப்பல்கள், விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையே குலைநடுங்க வைக்கும் நாடாக வடகொரியா இருந்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளை மீறியும், ஐநா சபையில் தடையை மீறியும் அணுஆயுத சோதனையும் நடத்தி வருகிறது.
இது, அண்டை நாடான, தென் கொரியாவுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும், வடகொரியா சோதனை நடத்தும் ஏவுகணைகள் அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்தவையாகவே உள்ளன. அவை அமெரிக்காவை வைப்பதற்காகவே தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டி, தென்கொரியாவுக்கு அமெரிக்க பல்வேறு ராணுவ உதவிகளையும் பயிற்சிகளையும் செய்து வருகிறது.
கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய சக்தி வாய்ந்த திட எரிபொருளால் ஆன ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா வெற்றி கண்டது. அதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டிருந்தார்.
இது உலக நாடுகளையும் குறிப்பாக தென்கொரியா மற்றும் அமெரிக்காவை கதிகலங்க வைத்தது. இதையடுத்து, வடகொரியா மீது கண்காணிப்பை அமெரிக்கா தீவிரப்படுத்தியதோடு, தென்கொரியாவுடன் சேர்ந்து பயிற்சியையும் அதிகப்படுத்தியது.
இந்நிலையில், மஞ்சள் கடலில் பயணித்த கப்பல்கள், விமானங்களை குறிவைத்து, வடகொரியா ஜிபிஎஸ் தாக்குதல் நடத்தியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது, தென்கொரியாவை ஒட்டிய வடகொரிய மாகாணங்களான ஹேஜூ மற்றும் கேசாங் பகுதிகளில் இருந்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும் நடத்தப்பட்ட ஜிபிஎஸ் தாக்குதலில் பல கப்பல்கள், பயணிகள் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, மஞ்சள் கடலில் போர்க்கப்பல்களை தயார் நிலையில் வைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் என்று, அதற்கு ஏற்ப விமானப்படை, கப்பற்படையை தென்கொரியா மற்றும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஜிபிஎஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அமெரிக்காவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.