லயோலா கல்லூரியின் அங்கமான லயோலா வணிக நிர்வாக நிறுவனத்தில் தாய்மையின் தலைமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“நோன்காபி நோசெகெனி யார் என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. ஆனால் நெல்சன் மண்டேலா யார் என்று கேட்டால், உலகம் தங்களுக்குத் தெரியும் என்று பெருமையாகச் சொல்லும். இந்த உலகம் வெற்றிகரமான தலைவர்களைக் கொண்டாடுகிறது, ஆனால் சிற்பத்தை வடிவமைக்கும் சிற்பியைக் கொண்டாடத் தவறிவிட்டது”- லிபா இயக்குநர் ஃபாதர் ஜோ அருண். இந்த உரையோடு கருத்தரங்கு தொடங்கியது.
இந்த உலகில் ஒவ்வொரு வணிகப் பள்ளிகளும் தங்கள் மாணவர்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகும் பல்வேறு நிறுவனச் சவால்களுக்குத் தயார்படுத்தும் வகையில் பலவிதமான தலைமைப் பண்புகளையும் கோட்பாடுகளையும் கற்பிக்கின்றன. லயோலா வணிக நிர்வாக நிறுவனத்தின் (LIBA) தலைமைத்துவ சிறப்புக்கான மையம் (Centre for Leadership Excellence) வரலாற்றில் முதல் முறையாக, “தாய்மையின் தலைமை” (Mothering Leadership) என்ற தலைப்பில், ஓர் ஆய்வரங்கை (Colloquium) ஏற்பாடு செய்தது.
இந்த அரங்கில், உலகில் ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்குப் பின்னால் இருக்கும் தாயின் தலைமைத்துவ வளர்ப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைத்துவத்தை வளர்க்கும் உலகில், இந்த ஆய்வு மாநாடு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு என்பதை நிரூபித்தது.
இந்த ஆய்வரங்கிற்கு, குகேஷ் (இளைய செஸ் கிராண்ட் மாஸ்டர்) மற்றும் குகேஷின் தாய் டாக்டர்.ஜே.பத்மா குமாரி ஆகியோரும் யாழினி (பின்னணிப் பாடகி) மற்றும் யாழினியின் தாய் ஜோசபின் பெல்லா அழைக்கப்பட்டனர். இரு தாய்களும் தங்களின் குழந்தைகளுக்காகச் செய்த தியாகம் மற்றும் ஊக்கம் அரங்கத்தையே ஒளிரச் செய்தன. இவை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் “தாய்மை வழங்கும் ஆதரவின்”முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
குகேஷ், செஸ் போட்டிகளில் பயம் ஏற்படும் தருணங்களில் தனது தாய், ஆதரவாக மட்டுமின்றி ஊக்கத்தின் ஆதாரமாகவும் இருக்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினார். செஸ் போட்டியின்போது அவர் தனது தாயிடம் தொலைபேசியில் பேசுவதுகூட, எவ்வாறு அவரது உற்சாகத்தை அதிகப்படுத்தும் என்பதை அழகாக விவரித்தார். தோல்வியின்போது சமூக ஊடகங்களின் கடுமையான விமர்சனங்கள் குகேஷைச் சூழ்ந்தபோது, தனது தாயின் அசைக்க முடியாத ஆதரவு தன்னை எப்படி ஆற்றுப்படுத்தியது என்றும் பகிர்ந்துகொண்டார்.
வளர்ந்து வரும் பின்னணிப் பாடகியான யாழினி, சிறுவயதிலிருந்தே தனது இசைத் திறமையை அங்கீகரிப்பதில் தனது தாயின் முக்கியப் பங்கு பற்றிப் பகிர்ந்துகொண்டார். தனது தாய்க்கு இசை பற்றிய அறிவு குறைவாக இருந்தபோதிலும், யாழினியை முழு மனதுடன் ஊக்குவித்து, தன்னை நட்சத்திரமாக வழிநடத்தும் சக்தியாக இருந்தவர் அம்மா என்றார் யாழினி. இன்று தான் சாதித்துள்ள அனைத்தும் அம்மாவின் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் சான்றாகும் என்று மகிழ்ந்தார் யாழினி.
குகேஷ் மற்றும் யாழினியின் தாய்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி சார்ந்த அழுத்தங்களைத் திணிக்காமல் வளர்த்ததே, அவர்கள் பிடித்த துறையில் ஆர்வத்தைத் தொடர ஊக்குவித்தது இந்த ஆய்வரங்கில் தெரிய வந்துள்ளது.
மேலும் காண