Modi government’s last budget? Interim Budget Session of Parliament begins today | Budget 2024: மோடி 2.0 அரசின் கடைசி பட்ஜெட்


Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்:
ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. அதைதொடர்ந்து, நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 9ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, நேற்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் என்ன இருக்கும்?
தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்பிக்கப்படும் பட்ஜெட் பொதுவாக இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இந்த,  இடைக்கால பட்ஜெட்டில்,  கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம்,  நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாகும்.
பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பில் பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைசார் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, மக்கள் வரி செலுத்துவதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசின் கடைசி பட்ஜெட்டா?
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இதையடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் அணி தான், 2024-25 நிதியாண்டிற்கான விரிவான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நாட்டிலேயே அதிகமுறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன் நாளை பெறுவார். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு தொடர்ந்து ஆறு முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமயையும் பெற உள்ளார்.

மேலும் காண

Source link