Minister Udayanidhi Stalin Has Said That The DMK Does Not Agree On The Ram Temple Because The Mosque Was Demolished And The Temple Was Built. | Minister Udayanidhi Stalin: ’மதத்திற்கோ, நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை’

மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை;  ராமர் கோயில் வந்தது  பிரச்சனை இல்லை, அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான், அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாடு  வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை  சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ” இந்த சுடர் ஓட்டத்திற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து தொடங்கி வைத்துள்ளேன். இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு  சேலம் வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இந்த மாநாடு .இதை நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்றார்.
கடந்த 9 ஆண்டுகளாக மாநில உரிமைகளை அ.தி.மு.க. ஆட்சியில் நாம் முழுமையாக  கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் நாம் இழந்துள்ளோம். இவை அனைத்தையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவரை இந்திய அளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படவில்லை. குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இனி இந்திய வரலாற்றில் இது போன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும் என்றார். கூடி கலைந்த கூட்டம் அல்ல , கொள்ளை கூட்டம் என்பதை நிரூபுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் இரண்டு பேரிடர்  ஏற்பட்டதின்  காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட  திமுக இளைஞர் அணி மாநில மாநாடு வரும்  21 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர் அணியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.  தற்போது ஏற்றப்பட்ட சுடர் திமுக தலைவரிடம் மாநாட்டின் போது ஒப்படைக்க உள்ளோம். இரு சக்கர வாகன பேரணி, புகைப்பட கண்காட்சி,   பேச்சாளர்கள் உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதக தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெறும்  இளைஞர் அணியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும்  தீர்மாணங்கள் குறித்து தமிழ்நாடு மட்டும் அல்ல  அனைவரும் எதிர்பார்கிறார்கள், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு  மிகப் பெரிய முன்னெடுப்பாக  மாநாடு அமையும். 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ற இலக்கை நோக்கி நீட் தேர்வு விலக்கு கையெழுத்துக்கள் பெறப்பட்டது. தற்போது  85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம்,  பின்னர்  நானே நேரடியா  டெல்லி சென்று  குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.
மேலும், ராமர் கோயில் திறப்பு குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே கலைஞர் சொன்னதுபோல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. ராமர் கோயில் வந்தது பிரச்சனை அல்ல அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில், திமுகவிற்கு உடன்பாடு இல்லை” என தெரிவித்தார்.  எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, “அவர் தவழ்ந்து தவழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது” என விமர்சித்து பேசியுள்ளார்.

Source link