அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சேகர‍்பாபு தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் கபாலீஸவரர் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பின், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

அந்த வகையில், முதலில் 200 பேர் தமிழ்நாட்டைச் சார்ந்த மக்கள் ராமேஸ்வரத்திலிருந்து காசி செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தற்போது, 300 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதுவரை காசி ராமேஸ்வரம் புனித பயணங்களுக்கு 500 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு, இந்த 500 பக்தர்களுக்கும் ஆன செலவு ரூ.1.25 கோடியை மானியமாக அரசு வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு ஆடி மாதம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை ஆன்மீக சுற்றுலா அழைத்து சிலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 250 பேர் 5 மண்டலங்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

இதையடுத்து,  முதலமைச்சரின் வெளிநாடு பயணத்திற்கு முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தலைவர் வலது புறம் செல்ல சொன்னால் வலது புறம் செல்வோம், இடதுபுறம் செல்ல சொன்னால் இடதுபுறம் செல்வோம், முன்னாள் செல் என்றால் செல்வோம், பின்னால் செல் என்றால் செல்வோம் என்று கூறினார். நான் அடிப்படைத் தொண்டன் பெரிய முடிவுகளை எல்லாம் முதலமைச்சர் எடுப்பார் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.