மாமல்லபுரத்தில் மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் மக்கள், பாரம்பரிய முறையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திர நாளே மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மகம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று பௌர்ணமி என்பதால் கூடுதல் சிறப்பு. பௌர்ணமி அன்று மாசி மகம் வருவதால் பலரும் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
மாசி மகம் திருவிழா 2024
இந்நாளில் புண்ணிய நதிகளிலோ அல்லது கடல்களிலோ நீராடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் மட்டுமின்றி தமிழ் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் பிரபலமானது. மேலும் இந்நாளில் வழிபடும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் கடல் கரைகள் ஆறுகள் அல்லது குளங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை தெப்போற்ச்சவம் என்றழைக்கப்படும். அங்கு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இதனை காண மங்களகரமான நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீட்டிலேயே விரதம் இருந்து சிவனையும் பார்வதையும் வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் உங்களது 7 ஜென்மம் பாவம் தீரும் என்பது ஐதீகம். அது போல் நீங்கள் சிவன் பார்வதி முருகனைத் தவிர பெருமாளையும் வழிபடலாம். மாசி மகம் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு மேற்கொள்வது வழக்கம்
மாமல்லபுரத்தில் கொண்டாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும் குடவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகம் நாளான்று இருளர் இன மக்கள் கடற்கரையில் ஒன்றுக்கூடி குடில்கள் அமைத்து மூன்று நாட்கள் தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
ஏழு படிகள் கொண்ட கோயில்
இந்நிலையில், மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர். மேலும், இன்று அதிகாலை கடற்கறையில் மணலில் ஏழு படிகள் கொண்ட கோயில் அமைத்து கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வழிபட்டனர். மேலும், குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதற்காக கன்னியம்மனிடம் அருள்வாக்கு பெற்று நிச்சயம் செய்தனர். இவர்களுக்கு அடுத்த ஆண்டு மாசிமக நாளில் கடற்கரையில் திருமணம் நடைபெறும். கடந்த ஆண்டு இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
போலீஸார் பாதுகாப்பு பணி
மேற்கண்ட பாரம்பரிய வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பல ஆயிரக்கணக்கான இருளர் மக்கள் குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டிருந்ததால், கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தற்காலி கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரை பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் காண


































































































