மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் 2021ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஊர் மக்களின் நன்மைக்காக உரிமை குரல் எழுப்பும் நாயகனின் போராட்டம் தான் ‘கர்ணன்’ கதைக்களத்தின் மையக்கரு.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஹீரோ நடத்தும் போராட்டங்களை மையமாக வைத்து உருவான படம் கர்ணன். அடக்குமுறையை பொறுக்காத ஒரு இளைஞனாக, உரிமையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை கொண்ட முகமாக, விதி மீறல்களை தட்டி கேட்கும் அசுரனாக நடிகர் தனுஷ் முதிர்ச்சியன ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தென் மாவட்ட வட்டார பேச்சு வழக்கு, உடல் மொழி என அனைத்தும் கதைக்களத்துக்கு வலு சேர்த்தது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகாக செதுக்கி சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் லால். அதே போல தனுஷின் சகோதரியாக நடித்த லஷ்மிப்ரியா, நாயகி ரஜிஷா விஜயன் , அழகம்பெருமாள், கவுரி, யோகிபாபு, பூ ராமு, ஜானகி, நட்டி என அனைவருமே அவரவரின் பங்களிப்பை தேவைக்கேற்ற கொடுத்து இருந்தனர்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படம் முழுக்க டிராவல் செய்து படத்துக்கு உயிர் கொடுத்தது. அதிலும் ‘கண்டா வரச் சொல்லுங்க’, ‘உட்ராதீங்க எப்போ’ , ‘மஞ்சனத்தி’ உள்ளிட்ட பாடல்கள் கதைக்களத்தோடு பொருந்தி அந்த மண், அவர்களின் வாழ்வியல் மற்றும் உணர்வுகளை படம் பிடித்தது. போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் அரசியல், பெயர் சூட்டல், கதாபாத்திர கட்டமைப்பு என அனைத்திலும் மெனெக்கெட்டு நேர்த்தியை கையாண்டு இருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் மனிதர்களுடன் படம் ஜீவராசிகளை காட்சிப்படுத்தியது படத்திற்கு அழகு சேர்த்தது. கிராம மக்களின் நியாயத்திற்காக போராடும் கதைக்களத்தில் காதல் அடிபட்டு போனது. அது கமர்ஷியல் காரணத்துக்காக அமைக்கப்பட்டு இருந்தாலும் படத்துடன் ஒட்டாமல் தொய்வை ஏற்படுத்தியது. ஒரு சில சிறு சிறு குறைகளை களைந்து இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உள்வாங்கி பார்த்தல் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ திரைப்படம் தனித்து தடம் பதித்த ஒரு காவியம்.
மேலும் காண