Mahua Moitra : லஞ்சம் பெற்ற வழக்கில் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மஹுவா மொய்த்ராவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
தொடர் சவால்களை சந்திக்கும் மஹுவா மொய்த்ரா:
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் அனல் பறக்க கேள்விகளை எழுப்பியவர் மஹுவா மொய்த்ரா. இந்த கேள்விகளை எழுப்ப இவர், லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.
இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார்.
இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
ஸ்கெட்ச் போட்டு தூக்கும் அமலாக்கத்துறை:
தொடர் சவால்களை சந்தித்து வரும் மஹுவா மொய்த்ராவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாக மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது மட்டும் இன்றி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடக்க உள்ள விசாரணைக்கு வரும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்தது.
அந்த வரிசையில், நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: விவசாய சின்னத்தை இழக்கிறதா நாம் தமிழர்? கர்நாடக கட்சியால் வந்த சிக்கல்.. அடுத்த பிளான் என்ன?
மேலும் காண