செங்கோலுக்கு எதிராக இப்படியா பேசினார் மதுரை எம்பி சு.வெங்கேடசன்? முழு விவரம்…

மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், செங்கோல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார்.

செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் போன்றவற்றை எல்லாம் தகர்த்துவிட்டுதான் இந்தியாவில் ஜனநாயகம் காலூன்றியதாக தெரிவித்தார். மன்னராட்சி எப்போது ஒழிந்ததோ, அப்போதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டதாகவும் சு.வெங்கடேசன் கூறினார்.

செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள், எத்தனை பெண்களை தங்களது அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று பாஜகவினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் வைத்திருப்பதன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்? என்றும் வினவினார்.

நாடாளுமன்றத்தில் வாயிலில் இருந்த மகாத்மா காந்தியின் சிலை, அம்பேத்கரின் சிலை போன்றவை இன்று காணவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், நாடாளுமன்றத்தின் பின்புற வாசலில் மகாத்மா காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில், சாணக்கியரையும், சாவர்க்கரையும், செங்கோலையும் நாடாளுமன்றத்திற்குள்ளே வைத்திருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

செங்கோல் என்பது மன்னராட்சி குறியீடு மட்டுமல்லாமல், அறம் மற்றும் நேர்மையின் குறியீடாக இருந்த‌தாக தெரிவித்த சு.வெங்கடேசன், பாஜகவினருக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.