Lok Sabha polls 2024 First general election history held in 68 phases know more details here


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்தமுறையை போன்று, இந்த முறையும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஜனநாயக திருவிழா:
வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை, 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
நவீன தொழில்நுட்பம், தேவையான அனைத்து வசதிகள் இருக்கும்போதிலும், ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், கொஞ்சம் வரலாற்றை திரும்பி பார்ப்பது அவசியம். பல சுவாரஸ்யங்களுக்கு மத்தியில் இந்தியாவின் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யங்கள் நிறைந்த முதல் பொதுத்தேர்தல்:
குறிப்பாக, இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தேர்தல் என்றாலே என்ன என தெரியாத கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்த இந்தியாவில் தேர்தல் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும், பல சவால்களுக்கு மத்தியில் இங்கு தேர்தல் நடந்துள்ளது.
எந்த வித தொழில்நுட்பமும் போதுமான பாதுகாப்பு படைகளும் இல்லாத காரணத்தால் நாட்டின் முதல் மக்களவை தேர்தல் 68 கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த 1951ஆம் ஆண்டு, அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கிய முதல் மக்களவை தேர்தல் 1952ஆம் ஆண்டு, பிப்ரவரி 21ஆம்  தேதி முடிவடைந்தது.
25 மாநிலங்களில் 401 தொகுதிகளில் 489 (சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர்கள் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது) இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 314 தொகுதிகள் தலா ஒரு உறுப்பினரையும், 86 தொகுதிகளில் இரண்டு உறுப்பினர்களையும் (பொதுப் பிரிவில் இருந்து ஒருவர் மற்றும் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு தொகுதியில் மட்டும் மூன்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீர்:
ஒரு தொகுதியில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையானது கடந்த 1960களில் ரத்து செய்யப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் 1951ஆம் ஆண்டு, பொதுத்கதேர்தல் நடத்தப்பட்டது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதன் வானிலை பொதுவாக மோசமாக இருக்கும் என்பதால், அதற்கு முதற்கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள மாநிலங்கள் 1952ஆம் ஆண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேர்தல் நடந்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 1967 ஆம் ஆண்டு வரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் மக்களவைத் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதையும்  படிக்க: Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் – எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன?

மேலும் காண

Source link