நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக ஆகிய 4 முனை போட்டி நடைபெறுகிறது. பாஜக இம்முறை தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தேசிய தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ராகுல் காந்தி தமிழ்நாடு பயணம்:

அந்த வகையில் இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நெல்லை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அங்கு இந்திய கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு 8 தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்,

இதைத் தொடர்ந்து மாலை 6.15 மணியளவில் நெல்லையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு ராகுல் காந்தியும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஒரே மேடையில் வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார கூட்டம்:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரைக்கு வருகிறார். மாலை 6.15 மணிக்கு வருகை தரும் அவர், நேதாஜி சாலை தண்டாயுதபாணி முருகன் கோயில், ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார், ஆதீனம் வழியாக வாகான பேரணியில் ஈடுப்பட்டு வாக்கு சேகரிக்கிறார். அதன்பின் சிறுது நேரம் பிர்ச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு வருகை:

இது ஒரு பக்கம் இருக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தமிழ்நாடு வருகிறார். டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு செல்கிறார். காலை 9.45 மணிக்கு வருகை தரும் அவர், கிருஷ்ணகிரி பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

அதன்பிறகு, ஹெலிகாப்டரில் சிதம்பரம் சென்று பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பகல் 12.35 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர், தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தனுக்கு ஆதரவாக வாகன பேரனியில் ஈடுப்பட்டு வாக்கு சேகரிக்கிறார்.