Lok Sabha Election 2024 Likely To Held April 16th In Tamil Nadu Election Commission Update

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்படவுள்ள நிலையில், ஏப்ரல் 16ல் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றம்

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியா
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரப்போகிறதா அல்லது பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவே மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கப்போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் அறிவிக்கும் முன்னரே தங்களது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். மாநாடுகள், கூட்டங்கள், யாத்திரைகள் என நாடாளுமன்ற தேர்தல் களம், தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
அதுவும், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டி அதற்கு பிரம்மாண்ட திறப்பு விழாவை நடத்தி முடித்திருப்பதால் இந்தியா முழுவதும் இந்துக்களின் வாக்கு சிந்தாமல் சிதறமால் தங்களுக்கு வந்து விழும் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆனால், தென் மாநிலங்கள் எப்போதும் பாஜகவிற்கு எட்டா கனியாகவே இருந்து வரும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க பல்வேறு யுத்திகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அடிக்கடி வருவது, திட்டங்களை தொடங்கி வைப்பது போன்ற நடவடிக்கைகளால் தென் மாநில மக்களின் வாக்குகளை பெற நினைக்கிறார். வட மாநிலங்களை விட தென் மாநிலங்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து பாஜக மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் அவர் தொடர்ந்து முயற்சி வருகிறார்.
’நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தி எதிரொலிக்கும்’
அதே நேரத்தில், இண்டியா கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்து, அரசியல் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தன்னுடைய பாத யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார். திமுக தன் பங்கிற்கு இளைஞரணி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அதில் பாஜகவை ஆட்சியை விட்டு அகற்றுவோம் என்று முழங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் நேற்று தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாஹூ வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதியில் நடத்த உத்தேசமாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மார்ச் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிவிடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏழு கட்டங்களாக தேர்தல் ?
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக, அதாவது ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19 வரை நடத்தப்பட்டது. அதே முறையில் 2024ஆம் ஆண்டு தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக மாநில தேர்தல் அதிகாரிகள் விரைவாக இறுதி வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை பேசுவதற்கும் நாடாளுமன்ற பணிகளை மேற்கொள்ளுவதற்கும் குழுக்களை நியமித்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. விரைவில் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளை ஈடுபட முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி ஏப்ரல் 16 என்ற தகவல் வெளியான நிலையில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

Source link