Lok Sabha Election 2024 CV Shanmugam Says AIADMK Begged BJP To Get Four Legislators – TNN | Lok Sabha Election 2024: அதிமுக போட்ட பிச்சையால் பாஜக 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுஅதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசியதாவது:
பொன்முடிக்கு அடக்கம் தேவை
ஜெயிலுக்கு செல்ல வேண்டிய பொன்முடி நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் அமைச்சராகியுள்ளார். அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறார். இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறது. ஆணவம் கூடாது, பொன்முடிக்கு அடக்கம் தேவை. தற்போது திமுக அமைச்சர்கள் எல்லாம் தங்கள் மீதான வழக்குகள் குறித்துதான் பேசிக் கொள்கிறார்கள், தங்கள் துறையின் திட்டங்கள் குறித்தும், மக்கள் நலன் குறித்து பேசுவதில்லை. திமுக அமைச்சர்கள் எல்லாம் தற்போது பேயறைந்து போயுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு அளிக்கக்கூடிய வாக்கு. திமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு.
வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி,
மாநிலத்தைப் பற்றி கவலைப்படாத திமுக அரசு, மக்களை பற்றி கவலைப்படாத பாஜக அரசு. மதத்தின் பெயரால் இன்றைக்கு நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அரசு பாஜக. இன்றைக்கு நாடு ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என அண்ணாமலை சொல்கிறார், நாங்கள் சொல்கிறோம் வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி. பாஜக ஆண்ட பத்தாண்டு காலமே போதும். பாஜக ஆண்டதும் போதும் மக்கள் கஷ்டப்பட்டது போதும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. பாஜகவை யாராவது எதிர்த்தால், வருமான வரித்துறை, அமலாக்குத்துறை, மத்திய புலனாய்வுத்துறை வரும். இந்த மூன்றும் தான் பாஜகவின் கூட்டணி கட்சிகள். பாஜகவில் இருப்பவள் எல்லாம் உத்தமர் காந்தியா. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கே வராத பாஜக, அதிமுக போட்ட பிச்சையால் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. அதற்குள்ளாகவே அனைத்து நிறுவனங்களை மிரட்டி பணம் வசூல் செய்யப்படுகிறது.
அண்ணாமலை வந்தபோது  எல்லோரிடமும்  பணம் வசூல்
விழுப்புரத்திற்கு அண்ணாமலை வந்தபோது  எல்லோரிடமும்  பணம் வசூல் செய்யப்பட்டது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். அதிமுக மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் ஒரு திட்டம் கூட தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் புயல், வெள்ள வரும்போது வராத பிரதமர், தேர்தல் வந்தால் மட்டும் வருகிறார். பிரதமர் காரில் வருவார், ரயிலில் வருவார், பேருந்தில் வருவார், கப்பலில் வருவார், சாலையில் வருவார் அப்போதும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்க மாட்டார். காவிரியில் தண்ணீரில் திறக்க நடவடிக்கை எடுக்க மாட்டார். மேகதாது அணை கட்டக்கூடாது என நாம் போராடினால் மத்தியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சர் அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிப்போம் என கூறுகிறார்.
திருக்குறளை ஏன் தேசிய நூலாக அறிவிக்கவில்லை
தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் தொன்மையான மொழி. தமிழ் பிடித்த மொழி. திருக்குறள் எனக்கு பிடித்த நூல் என கூறுகிறார். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம் ஆனால் அறிவிக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக தான் இப்படி பேசுகிறார் மோடி. தமிழகத்திற்கு வந்தால் தமிழ். ஆந்திராவிற்கு சென்றால் தெலுங்கு. கர்நாடகாவிற்கு போனால் கன்னடம். கேரளத்திற்கு சென்றால் மலையாளம் ஆனால் எல்லோருக்கும் மோடி அல்வாதான் தறுகிறார். ஒன்றிய அமைச்சர்களுக்கே மரியாதை இல்லை என பாஜகவினர் கூறுகிறார்கள். ஒன் மேன் ஷோ நடத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஒன்றிய அரசும் மாநில அரசும் மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. நாடு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், இந்தியாவை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் துண்டாட நினைக்கிற பாஜகவையும், தமிழகத்தை சிதைக்கும் திமுகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Source link