Kumbabhishek ceremony of 2000 year old Vennaimalai Sri Balasubramania Swamy Temple in Karur | 2000 ஆண்டுகள் பழமையான கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்


கரூரில் 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
 

2000 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்:
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் மற்றும் கரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ கருவூரார் சன்னதி மூன்றாவதாக அமைந்துள்ள ஒரே கோவில் கரூர், வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். 2000 ஆண்டுகள் பழமையான ஆலயங்களில் ஒன்றான கரூர் வெண்ணெய்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோவிலின் கும்பாபிஷேகம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வாக கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரம்மாண்டமாக பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது.
 

ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்:
யாக கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு, கோபுர கலசத்தை வந்தடைந்தனர். பின்னர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் கலசத்திற்கு தூப தீபம் காண்பிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான தொண்டு நிறுவனங்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சித்திரை தேரோட்டம்:
குளித்தலை அருகே அய்யர்மலையில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலமானது கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த அய்யர் மலையானது வாட்போக்கி மலை, காகம் பறவாமலை, ரத்தினகிரி மலை, ஐவர்மலை என்றும் சுவாமி மூலவர் வாட்போக்கி நாதர், முடித்தழும்பர், ராஜலிங்கர், மாணிக்க மலையான்  என்றும் அழைக்கப்படுகிறார்.
மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும்  சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உற்சவர் அம்மாளுடன் சிறப்பு அலங்காரத்தில் நந்தி, கைலாசம், ரிஷபம், காமதேனு, சிம்மம், சேஷம்,பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வரும் சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உடனுறை சுரும்பார் குழலி அம்மனுக்கு பால், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.
 

தானியங்கள் தூவி நேர்த்திக்கடன்:
சுவாமி உற்சவர்கள்  சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள்  ஓம் நமச்சிவாயா என்ற நாமம் முழங்க, சிவ வாத்தியங்கள் இசைக்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் கிடைக்கும் அர்ச்சனை செய்த வழிபட்டனர். தேரோட்டமானது அய்யர்மலை நான்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையினை பல்வேறு கோவில் குடிப்பாட்டுக்காரர்கள்  வடம் பிடித்து இழுக்க மூன்று நாட்கள் சுற்றி வந்து வரும் ஏப்ரல் 24ம் தேதி மாலை நிலைக்கு வந்தடையும். திருத்தேரினை முன்னிட்டு அய்யர் மலையை சுற்றி கோவில் குடி பாட்டு காரர்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்,நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட  தானியங்களை தூவி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
 

மேலும் காண

Source link