Kodanadu Case – Edappadi Palaniswami Appears In Madras High Court Today? | EPS Kodanadu Case: கோடநாடு வழக்கு

EPS Kodanadu Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி?
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று உச்சநீதிமன்றத்தி வளாகத்தி உள்ள மாஸ்டர் நிதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியூர் சென்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்னும் தமிழகம் திரும்பாததால், இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார் என அவரது வழக்கறிஞர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஈபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் , கடந்த 2017ம் ஆண்டு காவலாளி கொல்லப்பட்டு உள்ளே இருந்த சில ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளானது. அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊடகங்களிலும் பல்வேறு வகையான செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் தான் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை:
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தன்னால் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என எடப்பாடி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ”தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்கு பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தால், மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்க்க தனது வீட்டிற்கே வந்து சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென” எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஈபிஎஸ் கோரிக்கை ஏற்பும், நிராகரிப்பும்:
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற தனிநிதிபதி, சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”ஈபிஎஸ் கூறக்கூடிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும்” நீதிபதிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து, ஜனவர் 30 மற்றும் 31ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி தனது தரப்பு சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்று அவர் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தனிப்பட்ட காரணங்களால் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராவது சந்தேகம் என கூறப்படுகிறது.
 

Source link