17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
இமாலய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கும் சிறப்பாக பந்து வீசவேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கும் தொடக்கத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது ஆட்டத்தின் மூன்றாவது பந்தில் பிலிப் சால்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ரியான் ப்ராக்கும், மூன்றாவது ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை ஆவேஷ் கானும் தவறவிட்டனர். ஆனால் நான்காவது ஓவரை வீசிய ஆவேஷ் கான் பிலிப் சால்ட்டுக்கு பந்து வீசி, அவரே கேட்ச் பிடித்து மிரட்டவைட்த்தார். பவர்ப்ளேவில் ஒரு விக்கெட்டினை இழந்திருந்தாலும் கொல்கத்தா அணியின் ரன்ரேட் உயர்ந்தவண்ணமே இருந்தது. குறிப்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய ரகுவன்ஷி அதிரடியாக பவுண்டரிகளை விளாச, தொடக்க வீரர் சுனில் நரைனும் அதிரடியாக விளையாட ஆட்டத்தில் சூடு பிடுத்தது, பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 50 ரன்களை எளிதாகக் கடந்தது.

தொடர்ந்து அதிடியாக இந்த கூட்டணி விளையாட கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து கொண்டே இருந்தது. 10 ஓவரில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. அஸ்வின் மற்றும் சஹாலை விளாசு விளாசு என விளாசிய சுனில் நரைன் 29 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். அதிரடியாக விளையாடி வந்த ரகுவன்ஷி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரும் தனது விக்கெட்டினை 11 ரன்களுக்கு இழக்க, அடுத்து களமிறங்கினார் ரஸல்.

சுனில் நரைன் மற்றும் ரஸல் கூட்டணி சிறப்பாக விளையாடி அதிரடியாக ரன்கள் குவித்தது. ஆனால் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டினார். சுனில் நரைன் 11 பவுண்டரியும் 6 சிக்ஸரும் விளாசினார். சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக மூன்றாவது வீரராக சதம் விளாசியுள்ளார். 17வது ஓவரின் முதல் பந்தில் ரஸல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதேபோல் சுனில் நரேன் தனது விக்கெட்டினை 18வது ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் சஹல் இருவரும் இணைந்து 103 ரன்களை வாரிக் கொடுத்தனர்.