காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் கட்டுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வாகனத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தை நோக்கி கிரானைட் எனப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர்.
தொடர்ந்து துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் சுதாரித்துக்கொண்டு, பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பியோடினர்.
இந்த தாக்குதலில், 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 வீரர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பதான்கோட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, உத்தம்பூரில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஜோரியில் உள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.