Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி  கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வு குறித்து, சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கடுப்பான விஜய் சேதுபதி
“75 வருடமாக நாம் இந்திக்கு எதிராக, இன்றும் இந்தி தெரியாது போடா என்று டீஷர்ட் போடுகிறோம், இந்தி படிக்கணுமா வேண்டாமா?” என்ற கேள்வி விஜய் சேதுபதியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “எதற்கு இந்த கேள்வி? இதை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, யாரும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தி படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதை யாரும் தடுக்கவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.
கவனம் பெறும் கருபழனியப்பன் பேச்சு
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய உரை ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றையும் விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்ட கேள்வியையும் தொடர்புபடுத்தி இந்த உரையில் அவர் பேசியுள்ளார்.தனது உரையில் கரு பழநியப்பன் “சுதந்திர போராட்டாத்திற்கு பின் இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளே அதிகம் செல்வாக்கு பெற்றிருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளே ஆட்சியமைத்தன தமிழ்நாட்டில் மட்டும்தான் முதல்முறையாக 1967-ஆம் ஆண்டில் ஒரு மாநில கட்சி அரசமைத்தது. அண்ணாதுரை தலைமையில் திராவிட கட்சியை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்த்தது. அன்றைய சூழலில் தேசிய உணர்வே முக்கிய என்று பிற மாநிலங்கள் சொல்லிக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மட்டும்தான் இந்தி மொழியை எதிர்த்தது. தங்களது மொழிக்காக போராடாத எல்லா மாநிலமும் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டும்தான் முதலில் விழித்துக் கொண்டது. எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்  என்று சொல்கிறது. 
தமிழ்நாட்டின் இந்த வரலாற்றை மாற்ற தொடர்ச்சியான பொய்கள் பரப்ப பட்டு வருகின்றன, சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் அதனால்தான் அப்படியான ஒரு கேள்விகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் யாரையும் இந்தி கற்க விடுவதில்லை என்கிற தவறான பிம்பங்கள் இங்கு பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இங்கு இந்தியை பலரும் கற்கிறார்கள் ஆனால் யாரும் இந்தியை படிக்கச்சொல்லி வற்புறுத்த முடியாது” என்று கருபழனியப்பன் கூறியுள்ளார்.
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி  நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ். ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது.

Source link