கர்நாடக மாநிலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் சித்தராமைய்யாவைச் சந்தித்து வலியுறுத்திய நிலையில், கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
6ஆவது மாநிலமாக கர்நாடகம்
கடந்த சில மாதங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து ஆறாவது மாநிலமாக கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
2006 ಏಪ್ರಿಲ್ ಪೂರ್ವ ನೇಮಕಾತಿ ಅಧಿಸೂಚನೆಯಾಗಿ 2006 ರ ನಂತರ ನೇಮಕಾತಿಗೊಂಡ ರಾಜ್ಯ ಸರ್ಕಾರದ ಸುಮಾರು 13,000 ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ಹಳೆ ಪಿಂಚಣಿ ಯೋಜನೆ ವ್ಯಾಪ್ತಿಗೆ ಒಳಪಡಿಸಿ ಆದೇಶ ಹೊರಡಿಸಲಾಗಿದೆ.ಚುನಾವಣೆಗೂ ಪೂರ್ವದಲ್ಲಿ ಎನ್.ಪಿ.ಎಸ್ ನೌಕರರು ಮುಷ್ಕರು ಮಾಡುವ ವೇಳೆ ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿನೀಡಿ ನಾವು ಅಧಿಕಾರಕ್ಕೆ ಬಂದ ನಂತರ ಬೇಡಿಕೆ… pic.twitter.com/IJTzZACw2R
— Siddaramaiah (@siddaramaiah) January 24, 2024
இதுகுறித்து அவர் கூறும்போது, தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று உறுதி அளித்திருந்தேன். இப்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின்கீழ் 13 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியத் திட்டங்கள்: என்ன வித்தியாசம்?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் தொகை கடைசியாக அவர் வாங்கிய ஊதியத்தில் சுமார் பாதியளவுக்கு இருக்கும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, ஓய்வூதியத் தொகையில் பங்களிக்கும். அதன் அடிப்படையில், ஒருமுறை மொத்தத் தொகை அளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் என்ன நிலைமை?
முன்னதாக இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் அமைப்பு, பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.