Kalpana Soren Hemant Soren’s Wife Who May Be Next Jharkhand Chief Minister


Jharkhand CM Soren: ஜார்கண்டின் புதிய முதலமைச்சராவார் என கூறப்படும், கல்பனா சோரன் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஜார்கண்ட் முதலமைச்சராகிறார் கல்பனா சோரன்?
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா சோரன்  அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்கக்கூடும் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இந்த மாத தொடக்கத்திலேயே இதுதொடர்பாக பேசியிருந்தார். ஆனால், இந்த கூற்றை நிரகாரித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது மனைவி எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் நிராகரித்தார். 
ஜார்கண்ட்டில் தொடரும் பிரச்னை:
இந்நிலையில், பணமோசடி வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு, இன்று ஆஜராக உள்ளார். அப்போது, ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டால்,  கல்பனா சோரன் முதலமைச்சராக உள்ளதாக, வலுவான தகவல்கள் வெளியாகியுள்ளன.  சட்டமன்ற உறுப்பினர் கூட அல்லாத கல்பனா சோரன் முதலமைச்சராக பதவியேற்றால், ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக வேண்டும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஜார்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்குள் முடிவடைவதால் இடைத்தேர்தல் நிராகரிக்கப்படலாம்.
யார் இந்த கல்பனா சோரன்?
ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த கல்பனா கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி ஹேமந்த் சோரனை மணந்தார். அவருக்கு நிகில் மற்றும் அன்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1976ல் ராஞ்சியில் பிறந்தார். தொழிலதிபரின் மகளான இவர்,பொறியியல் பட்டப்படிப்பை முடித்ததோடு எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.
கல்பனா சோரன் ஒரு பள்ளியை நடத்தி வருவதாகவும், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று வணிக கட்டிடங்கள் அவர் பெயரில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகாரமளித்தல் தொடர்பான சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.  முதலமைச்சர் சோரன் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி, தொழில்துறை பகுதியில் (INDUSTRIAL AREA ) தனது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு ஒரு இடத்தை ஒதுக்கியதாக, எழுந்த குற்றச்சாட்டுகளால் கடந்த 2022ம் ஆண்டு கல்பனாவின் பெயர் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.
பணமோசடி வழக்கு:
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் 7 சம்மன்களை அனுப்பியும், ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறும் கேள்விகள் எழுப்பபப்ட்டன. தொடர்ந்து, ஜனவரி 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒருவேளை ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், கல்பனா சோரனை முதலமைச்சராக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

மேலும் காண

Source link