ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிலையில், வரும் எட்டாம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியில் இருந்தார். அவர் மீது சுரங்க முறைகேடுகளுடன் கூடிய பண மோசடி புகார் கூறப்பட்டு வந்தது.
இந்த புகார் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறையால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தது, அந்த மாநிலத்தின் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பின்னர், அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பாய் சோரன், பதவியேற்றுக்கொண்டார். இதனால், ஜார்க்கண்ட் மாநில அரசியலில் குழப்பம் சற்று தணிந்தது.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த மாதம் ஹேமந்த் சோரனுக்கு, ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையல் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட சம்பாய் சோரன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினா்.
அவரைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக ஹேமந்த் சோரன், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் வழங்கினார். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆட்சி அமைக்க வருமாறு ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், ஹேமந்த் சோரனை முதலமைச்சராக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிராமாணம் செய்து, ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஹேமந்த் சோரன் தலைமையில் புதிதாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்எல்ஏக்களும், ஆர்ஜேடி மற்றும் சிபிஐஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏவும் என மொத்தம் 46 எம்எல்ஏக்கள் இந்த கூட்டணிக்கு உள்ளனர்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை விட கூடுதலாக 5 எம்எல்ஏக்களின் ஆதரவு ஹேமந்த் சோரனுக்கு இருப்பதால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என தெரிகிறது.