மனக்கவலையை போக்க ஜவ்வாதுமலைக்கு ஒருபயணத்தை திட்டமிட்டு இயற்கையுடன் தனிமையில் அமர்ந்து இயற்கை அழகுடன் பேசிக்கொண்டு இருப்பதற்கு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

இயற்கையுடன் தனிமையில் பேசுவதற்கு

வேலை வீடு என மன நிம்மதி இல்லாமல் வாடிய முகத்துடன் சுற்றி வரும் எனக்கு அதில் இருந்து மீண்டு வருவதற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகு கொஞ்சும் ஜவ்வாது மலைக்கு மன நிம்மதியை தேடி என் நண்பர்களுடன் பயணத்தை மேற்கொண்டேன். ஜவ்வாது மலையின் அழகை ரசிக்க என்னுடைய நண்பர்களுடன் பைக்கில் செங்கம் வழியாக பயணத்தை மேற்கொண்டோம். அங்குள்ள மலைகிராமத்திற்கு சென்றோம், செல்லும் பாதைகள் செங்குத்தாக இருந்தன பைக் ஓட்டுவதற்கு சிரமமாக இருந்தாலும் சவாலாக எடுத்துகொண்டு பைக்கை ஓட்டி சென்றோம். செல்லும் பாதைகள் முழுவதும் இயற்கை அழகும் சில்லென்ற காற்று எங்கள் உடலை தழுவி செல்ல எங்கள் முகத்தில் புத்துணர்ச்சி கிடைத்தது. செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றதும் பைக்கை நிறுத்திவிட்டு அங்கு இருந்த பாறைகளில் அமர்ந்தோம். அந்த பகுதி பேரமைதியாக இருந்து, என்னுடன் வந்தவர்களும் தனித்தனியாக அமர்ந்து தனிமையில் இயற்கை அழகுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நாங்கள் அதிகம் கேட்காத ஒளிகள் கேட்டது, அது என்னவென்று சற்று உள்ளே சென்று பார்த்தோம். அங்கு இருந்த பறவைகளின் ஓசை மிகவும் அற்புதமாகவும், மனநிலையை சற்று மாற்றியது, அங்கு சற்று பலா பழத்தின் வாசம் வந்தது.

பள்ளி பருவத்தில் சாப்பிட்ட ஞாபகங்கள் மீண்டும் வந்தது

வாசத்தை பின்தொடர்ந்து சென்றோம் பலா மரத்திலேயே பழத்தை அணில் ருசி பார்த்து கொண்டு இருந்தது. அந்த சுவை நாக்கில் எச்சில் ஊறியது, உடனடியாக என்னுடைய நண்பன் மரத்தில் ஏறி மரத்தில் இருந்து பலாபழத்தை பறித்து அதனை ருசித்தோம். அதன் சுவை இதுவரை சாப்பிடாத பலாபழத்தின் சுவையாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அங்கு இருந்து புறப்பட துவங்கினோம். செல்லும் பாதையின் நடுவே ஆறு செல்வது எங்கள் கண்களில் தென்பட்டன. சுட்டெரிக்கும் வெப்பத்தின் நடுவில் தண்ணீரை பார்த்ததும் பைக்கை நிறுத்திவிட்டு, தண்ணீரில் முகத்தை கழுவினோம் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது, அந்த தண்ணீர் குடிப்பதற்கும் நன்றாக இருந்தது. அங்கு இருந்து செல்லவேண்டிய இடத்திற்கு புறப்பட்டோம். வழியில் சிறு சிறு கிராமங்கள் கண்டோம். அந்த கிராமங்களில் சிறிய அளவில் பெட்டி கடைகள் அதில் 80s, 90-களின் விரும்பி சாப்பிட்ட திண்பண்டங்கள் இருந்தன. அதனை பாக்கெட்டுகளாக வாங்கிக்கொண்டு அதனை சாப்பிட்டு கொண்டு சென்றோம். அப்போது சிறிய வயதுடைய ஞாபகம் மற்றும் பள்ளி பருவத்தில் சாப்பிட்ட ஞாபகங்கள் மீண்டும் சற்று வந்து சென்றது. அதனை பற்றி நாங்கள் பேசி கொண்டே சென்றோம்

சில்லென்ற காற்று என இயற்கையின் அழகிய கூறுகள் ஜவ்வாது மலையெங்கும் நிரம்பிவழிந்தன

மலையிலேயே பல ஆண்டுகாலம் வாழும் மலைக் கிராமத்து மக்கள், கூரை கொண்ட மண் வீடுகள் சாணம் கொண்டு மொழுகிய மண் தரையில் இருந்த பூச்சிகளை கொத்திகொண்டு இருந்த நாட்டு கோழிகள், அதன் அருகே சட்டையின்றி தலையில் தலப்பாவுடன் ஒரு பெரியவர் ஆடுகளை மேய்து கொண்டு இருந்தார். மலைக்கிராமத்து விவசாயம், ஆள் உயர்ந்த கடுக்காய் மரங்கள், சில்லென்ற காற்று என இயற்கையின் அழகிய கூறுகள் ஜவ்வாது மலையெங்கும் நிரம்பிவழிந்தன. மாலை நேரம் நெருங்க நெருங்க இயற்கையின் முழு அழகையும் மலை கிராமத்தையும் அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தோம். அங்கு இருந்த மணிகண்டன் நீங்கள் என்ன உணவு சாப்பிடிக்கிறீர்கள் என கேட்டார். உடனடியாக என்னுடைய நண்பர் அசைவம் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறினான். இங்கு வளரக்கூடிய நாட்டு கோழி குழம்பு, நாட்டு கோழி சூப் நன்றாக இருக்கும் என கூறிவிட்டு மணிகண்டன் சடசடவென காட்டுக்குள் நுழைந்தார். அடுத்த சில மணி நேரங்களில் காட்டு புதார்களில் இருந்து நாட்டு கோழிகள் பிடித்தவரப்பட்டன. அவைகளின் கால்கள் கட்டபட்ட நிலையில் கீழே வைத்தார். நாட்டு கோழிகள் பார்ப்பதற்கே உயர்ந்ததாகவும் மிகவும் நன்றாக இருந்தது.

மலை அரிசி சாப்பாட்டை இலையில் போட்டு சூடான நாட்டு கோழி குழம்பை ஊற்றி நிலாவின் வெளிச்சத்தில் சாப்பிட்டோம்

பிறகு மணிகண்டன் உங்களுக்கு அஸ்தமனம் ஆகும் சூரியனின் அழகை காட்டுகிறேன் என கூறி மேற்கு பகுதியை நோக்கி மலையில் சிறிது தூரம் உயரமான மரங்களின் நடுவே நடந்து சிறு மலையின் உச்சியை அடைந்த பிறகு சூரியன் அஸ்தமனம் ஆவது மிகவும் அழகாகவும் இருந்தது. பின்னர் இருள் சூழ துவங்கியதும் அங்கிருந்து வந்துவிட்டோம். இரவு 8 மணி ஆகியதும் மண் சட்டியில் சூடான நாட்டு கோழி குழம்பு வந்தது. நாங்கள் அங்கேயே திண்ணையில் அமர்ந்து வாழை இலையில் மலையில் சாகுபடி செய்யப்பட்ட அரிசியில் சாப்பாட்டை இலையில் போட்டு சூடான நாட்டு கோழி குழம்பை ஊற்றி நிலாவின் வெளிச்சத்தில் சாப்பிட்டோம், மீண்டும் எங்களுக்கு அம்மா நமக்கு சிறுவயதில் நிலாச்சோறு ஊட்டிய ஞாபகம் வந்தது, அந்த கிராமம் முழுவதும் சிக்னல் இல்லை நம்மை தொந்தரவு செய்ய எந்தவித அழைப்புகளும் இல்லை, சோசியல் மீடியாவில் முழ்கியிருக்க வாய்ப்பில்லை, செல்போன் இல்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கை, இயற்கையான காற்று, எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் 2 நாட்கள் வாழ்ந்தோம். இது எங்களின் மனக்கவலைகளை நீக்கியது. மறுநாள் படகு சவாரி, பீமன் நீர்விழிச்சிக்கு சென்றதை அடுத்த கட்டுரையில் காண்போம், நீங்களும் ஜவ்வாது மலைக்கு ஒருபயணத்தை திட்டமிட்டு உங்களின் மனக்கவலைகளை போக்கலாம்