Israel-Hamas war: 5 killed, many injured as parachute fails to open during aid drop in Gaza | Israel-Hamas war: விமானத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள்


Israel-Hamas war: காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து  5 பேர் உயிரிழந்தனர்.
5 பேர் உயிரிழப்பு:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடயேயான போரால். காஸாவில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இருதரப்பினர் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால், அங்குள்ள் மக்களுக்கு உணவும், நீர் மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  ஐ.நா. உடன் சேர்ந்து எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காசாவிற்கு  நிவாரண பொருட்களை வழங்கின. எகிப்து விமானப்படை விமானங்கள் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் காசா மீது உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசி வருகின்றன. அந்த வகையில், காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தின் பாரசூட் செயலிழந்ததால், பொதுமக்கள் மீது விழுந்து  5 பேர் உயிரிழந்தனர்.
உயிர்களை காவு வாங்கிய பாராசூட்:
காஸா நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க அரசு அந்நாட்டு  விமானப்படை விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளன. அதாவது உணவு, தண்ணீர், உடைகள் மற்று மருந்துகள் அடங்கிய பெட்டகம், விமானத்தில் இருந்து தூக்கி வீசப்படும். அவை பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும். அப்படி வீசப்பட்ட பெட்டகங்களில் ஒன்றில் இருந்த பாரசூட் செயலிழந்துள்ளது. இதனால், அதிவேகமாக தரையிறங்கிய ஒரு பெட்டகம் , கீழே உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்தின் மீது விழுந்துள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
காஸா நிர்வாகம் கோரிக்கை:
நிவாரணப் பொருட்களால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, “வான் வழியாக நிவாரணங்களை வழங்குவது பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம். தற்போது அது உண்மையாகியுள்ளது. எனவே தரைவழியாக அகதிகள் முகாமிற்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என காஸா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்:
காஸாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதப்படையினர் கடந்த ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 200-க்கும் அதிகமானோர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர்.  இதற்கு பதிலடி தரும் வகையில், காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. 5 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் காஸா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 30 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் நடந்த மோதலில் 424 பேர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண

Source link