காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

என்னதான் பிரச்னை?

இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கம் சண்டையிட்டு வருகிறது. அதுமட்டும் இன்றி செங்கடல் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயம் அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் பலுசிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை இன்று பதில் தாக்குதல் நடத்தியிருப்பது போர் பதற்றத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது. விமானப்படை நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தெற்காசியாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்:

சட்ட விரோத நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என்றும் பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ள பாகிஸ்தான், உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் பதுங்கியிருந்த தீவிரவாத குழுக்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத குழுக்கள் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது. சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் அல்-அட்ல் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே ஈரான் தாக்குதல் அமைந்ததாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் இருந்து தெற்காசியாவுக்கு போர் விரிவடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் எடுத்துள்ள நிலைபாடு புவிசார் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ஈரானுக்கு இந்தியா ஆதரவு:

தற்காப்பிற்காகவே பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இது ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். இந்தியாவைப் பொறுத்த வரையில், பயங்கரவாதத்தின் மீது சமரசமற்ற சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளோம். தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்றார்.

சீனா எடுத்துள்ள நிலைபாடு:

ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி போர் பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா சொன்னது என்ன?

பாகிஸ்தானில் ஈரான் நடத்திய தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், "அண்டை நாடுகளின் இறையாண்மை மிக்க எல்லைகளை மீறி ஈரான் செயல்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.