ipl 2024 ms dhoni fit to play today chennai super kings vs sunrisers hyderabad match


ஐ.பி.எல் 2024:
டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது எம்.எஸ்.தோனிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவாரா? இல்லையா ? என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்றைய போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி ஒரு போட்டியில் தோல்வி என்ற அடிப்படையில் 4 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தல தோனிக்கு என்னாச்சு?
முன்னதாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணியின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் மோதுவதற்கு முன்னதாக கடந்த இரண்டு போட்டிகளிலும் எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பிங் மட்டும் தான் செய்தார். பேட்டிங் செய்யவில்லை. இது ரசிகர்களை ஏமாற்றம் அடையைச் செய்தது.
காலில் ஏற்பட்ட காயம்

A gift for the fans he said! 🥹✨#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/fAIitAsPD7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2024

இந்நிலையில் தான் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் மூலம் முதன் முறையாக இந்த  சீசனில் பேட்டிங் செய்தார் தல தோனி. அந்தவகையில் டெல்லி அணிக்கு எதிரான அந்த போட்டியில் 16.1 ஓவர்கள் முடிந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்தார் தோனி. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 23 பந்துகளில் 72 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது. இதனிடையே களம் இறங்கிய தோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார்.
அடுத்த 16 ஓவரின் இரண்டாவது பந்தை ஓங்கி அடித்தார் கேட்சுக்கு போன அந்த பந்தை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் கோட்டை விட்டார். பின்னர் வந்த பந்துகளை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசினார். இதில் தல தோனிக்கே உரித்தான ஒற்றை கையில் சிக்ஸ் ஒன்றை பறக்கவிட்டார். இவ்வாறாக 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்களை விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்து இருந்தாலும் சென்னை அணி ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இருந்தனர்.
இன்றைய போட்டியில் விளையாடுவாரா?
ஆனால் இந்த போட்டி முடிந்த உடன் மைதானத்தில் தோனி கால் வலியுடன் நடந்து வந்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியது. ஏற்கனவே கடந்த சீசனின் போது தோனிக்கு கால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அதில் இருந்து குணமடைந்து தோனி இந்த சீசனில் விளையாடி வருகிறார். இதனிடையே தான் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் தோனி என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் தோனியின் காயம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தோனி காலில் ஏற்பட்ட காயத்திற்காக நிவாரண ஊசிகள் செலுத்திகொண்டதாகவும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சூழலில் பெங்களூரு மைதானத்தில் தல தோனியின் சரவெடியை கண்டிப்பாக பார்க்கலாம் என்ற ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை, ஹைதராபாத் அணிகள்? – இன்று நேருக்கு நேர் மோதல்!
மேலும் படிக்க: SRHvsCSK: சிஎஸ்கே மேட்ச்சுக்கு பாதிப்பில்லை; இன்று ஒருநாள்தான் டைம்: மைதானத்திற்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்

மேலும் காண

Source link