இந்தோனேசியாவில் வெள்ளத்திற்கு 174 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பல்வேறு தீவுகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவில் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

பெருவெள்ளம் வடியாத நிலையில், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், சுமத்திரா தீவில் மட்டும் இதுவரை 174 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னரே, பாதிப்பு குறித்து முழு விவரம் தெரிய வரும் தெரிகிறது.