Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

Ind vs Eng 4th Test: இன்று தொடங்கும் இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, அதற்கடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. 
ராஞ்சியில் நான்காவது டெஸ்ட் தொடர்:
இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியும் மும்முரமாக உள்ளது. இதனால், முந்தைய மூன்று போட்டிகளை போன்று, ராஞ்சி போட்டியிலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பலம், பலவீனம்:
சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய அணியை கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக கையாண்டு வருகிறார். பொறுப்பை உணர்ந்து கில், ஜெய்ஷ்வால் மற்றும் சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் விளையாடி வருவது அணிக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. ஜடேஜா மற்றும் பும்ராவின் செயல்பாடும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்து வருகிறது. அதேநேரம், அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள், அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் தொடரில் இல்லாதது இந்திய அணியின் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில், பும்ரா இருக்க மாட்டார் என்பதும் ரசிகர்களை ஏமாற்றமடையை செய்துள்ளது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில், இந்த தொடரில் ஒரு சராசரியான அணியாகவே செயல்பட்டு வருகிறது. இந்திய மைதானங்களின் தன்மையை அந்த அணியால் சரியாக கிரகிக்க முடியாமல் திணறுகிறது. இதன் காரணமாகவே கடந்த போட்டியில் 400 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மைதானம் எப்படி?
இந்த தொடரில் விளையாடிய மற்ற மைதானங்களை காட்டிலும், ராஞ்சி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டி டிராவிலும், மற்றொரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றுள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்),  யஷஸ்வி ஜெய்ஸ்வால்,  ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா,  ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ்,  முகமது சிராஜ் , முகேஷ் குமார்/ஆகாஷ் தீப்
இங்கிலாந்து: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி,  ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயிப் பஷீர்

Source link