பண மோசடி வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.

பண மோசடி வழக்கில் சிக்கிய ஹேமந்த் சோரன்:

இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு, கடந்த 20ஆம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், ஹேமந்த் சோரனிடம் பல்வேறும் கேள்விகள் எழுப்பபப்ட்டன.

தொடர்ந்து, ஜனவரி 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பரபரப்பாகும் ஜார்க்கண்ட் அரசியல்:

இதற்கு மத்தியில், நேற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஒருவேளை ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனா சோரனை முதலமைச்சராக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை ஆளுங்கட்சி வட்டாரங்கள் மறுத்து வந்தன. டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்-க்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனையை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை நெருக்கடியை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் இன்று ராஜினாமா செய்தார். 7 மணி நேர விசாரணையை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்று கொண்டார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை அவரை தனது காவலில் எடுத்தது. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள சம்பாய் சோரன், முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். முன்னதாக நடைபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

Hemant Soren: ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் சம்பாய் சோரன்.. ஹேமந்த் சோரனை கஸ்டடியில் எடுத்த ED