HBD Nassar: சினிமாவின் எல்லையில்லா கலைஞன்.. நடிகர் நாசரின் பிறந்தநாள் இன்று..!

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லனாக நடிக்கும் பிரபலங்களை மக்கள் அதிக அளவில் ரசிப்பார்கள். அவர்களில் ஒருவரான நடிகர் நாசருக்கு இன்று 66 ஆவது பிறந்தநாளாகும்.

நடிப்பு நாயகன்

பொதுவாக  ஒருவரின் நடிப்பை கொண்டு இவர் இந்த பிரபலம் தான் என நம்மால் எளிதாக அடையாளம் காட்டி விட முடியும். அதேபோல் வில்லனை அடையாளப்படுத்துவதற்கும் தனி மேனரிஸங்கள் உள்ளது. அந்த மேனரிஸங்களுக்கு சற்றும் பொருந்தி போகாதவர் நாசர் என்றே சொல்லலாம். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர், அப்பா கேரக்டர், தாத்தா கேரக்டர் என போடாத வேஷங்களை இல்லை. அதுதான் நாசர் என்ற ஒரு நடிகனின் அபார வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம்.

கே.பாலச்சந்தர் இயக்கிய கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நாசர். இவரின் நடிப்பு கமலை வெகுவாக ஈர்த்திருந்தது என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் தனது படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து வந்த நாசரை தேவர் மகன் படத்தில் தனக்கு நிகரான வில்லன் கேரக்டரில் அறிமுகம் செய்தார் கமல். மாயன் எனும் அந்தக் கதாபாத்திரத்தில் படம் பார்ப்பவர்களையும் மிரட்டி விடுவார்.

ஒரு பக்கம் சிவாஜி, இன்னொரு பக்கம் கமல் என இருவருக்கும் நிகராக ஒரு நடிப்பை தேவர் மகன் படத்தில் நாசர் வழங்கி இருந்தார். அப்புறம்  என்ன அவரை கூரைமேல் போட்ட ஏணியாக வானத்தை நோக்கி பயணப்பட வைத்தது. அதேபோல் கமலின் குருதிப்புனல் படத்தில் பத்ரி என்னும் கேரக்டரில் அசத்தியிருப்பார். இதன் பின்னர் மீண்டும் கமல் தயாரிப்பில் வெளியான மகளிர் மட்டும் படத்தில் மூக்கன் எனும் கேரக்டரில் பெண்கள் மீது சபலம் கொண்ட நபராக சிறப்பான நடிப்பை வழங்கி இருந்தார் நாசர்.

எல்லைக்குள் அடங்காதவர்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்தவர் நாசர். அதேசமயம் இவருக்குள் இருக்கும் அந்த நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை திறமை ஆகியவை எம் மகன், அவ்வை சண்முகி,சந்திரமுகி உள்ளிட்ட எண்ணற்ற படங்களை பார்த்திருக்கும் போது நம்மை மெய் மறந்து ரசிக்க வைக்கும் அளவுக்கு வெளிப்படும்.

நடிப்பது மட்டுமே தனது வேலையல்ல என்பதை உணர்ந்த நாசர் அப்போது தனது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் தேவதை, பாப்கார்ன், முகம், அவதாரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார். நாசரின் மகன்களும் சினிமாவில் நடிகராகி விட்டனர். அவரின் எத்தனை தலைமுறை நடிக்க வந்தாலும் நாசர் பெயர் என்றும் தமிழ் சினிமா வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்கும். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

Source link