இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் 1990 பிப்ரவரி 5ம் தேதி பிறந்த புவி, ‘கிங் ஆஃப் ஸ்விங்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். புவனேஷ்வர் குமார் தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு பந்து வீச்சாளராலும் செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட்டில் அவர் பெயரிலில் இன்னும் பல சாதனைகள் உள்ளது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்…
சச்சினை டக் அவுட் செய்த ஒரே பந்துவீச்சாளர்:
‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் டெண்டுல்கரை ரஞ்சி டிராபியில் டக் அவுட் செய்து சாதனை படைத்த ஒரே பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மட்டுமே. ரஞ்சி டிராபியில் புவனேஷ்வரைத் தவிர வேறு எந்த பந்து வீச்சாளராலும் சச்சினை டக் அவுட் செய்ய முடியவில்லை.
2008-09 ரஞ்சி சீசனில் உத்தரபிரதேச அணிக்காக புவனேஷ்வர் குமார் விளையாடியபோது, மும்பைக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரை டக் அவுட் செய்து வெளியேற்றினார். முதல்தர கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரு பந்து வீச்சாளர் சச்சினை டக் அவுட் செய்து புதிய பெருமை பெற்றார். புவி தனது 19 வயதில் இந்த சாதனையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வடிவங்களிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர்:
கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மற்றும் இதுவரை ஒரே இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆவார். இவரை தவிர வேறு எந்த பந்து வீச்சாளரும் இதுவரை இந்த சாதனையை படைத்ததில்லை. இது தவிர, சர்வதேச டி20 போட்டியில் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் இவர்தான்.
அறிமுக போட்டியிலேயே அசத்தல்:
2012ல் இந்திய அணியில் அறிமுகமான புவனேஷ்வர் குமார், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார் மற்றும் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், தனது முதல் டி20 சர்வதேச போட்டியில் நான்கு ஓவர்களில் 9 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான முதல் பந்திலேயே முகமது ஹபீஸை புவி வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 20.7 என்ற சராசரியில் மூன்று வடிவங்களிலும் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
229 international matches 👍294 international wickets 👌2013 ICC Champions Trophy-winner 🏆Here’s wishing Bhuvneshwar Kumar a very Happy Birthday. 🎂 👏#TeamIndia | @BhuviOfficial pic.twitter.com/NjaFp0Sb7v
— BCCI (@BCCI) February 5, 2024
1791 பந்துகள் – ஒரு நோ-பால் கூட இல்லை:
டி20 கிரிக்கெட்டில் ஒரு நோ-பால் கூட இல்லாமல் 1000 பந்துகளுக்கு மேல் வீசிய உலகின் ஒரே பந்துவீச்சாளர் புவனேஷ்வர் மட்டுமே. புவனேஷ்வர் குமார், 1791 பந்துகளில் ஒரு நோ-பால் கூட வீசவில்லை. டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் இரண்டு முறை பர்பிள் கேப்பை வென்ற ஒரே பந்து வீச்சாளர்:
ஐபிஎல்லில் இரண்டு முறை பர்பிள் கேப்பை வென்ற சாதனையை புவி படைத்துள்ளார். அவர் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை ஊதா நிற தொப்பியை வென்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இதுவரை:
புவனேஷ்வர் குமார் இதுவரை இந்தியாவுக்காக 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், டெஸ்டில் 63 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளையும், டி20யில் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். புவிக்கு மற்றொரு பெயர் ’ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் டெத் ஓவர்’ ஆகும். கடைசி டெத் ஓவர்களில் யாக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க முடியாமல் திணற செய்வார்.