Gyanvapi Mosque : ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடையில்லை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானவாபி வழக்கின் பின்னணி என்ன?

இதனால், இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி (Vyas Tehkhana) மூடப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மசூதியில் இந்திய தொல்லியில் துறை ஆய்வு மேற்கொண்டது. சமீபத்தில், அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியின் மூடப்பட்ட தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்:

வாரணாசி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி இஸ்லாமிய தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். ஞானவாபி மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி கமிட்டி, இந்த வழக்கை தொடர்ந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வாரணாசி நீதிமன்றம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இதன் மூலம், மாவட்ட நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 11 நாள்களுக்கு முன்பு, இரு தரப்பு வாதத்தை கேட்ட உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

"தெற்கு பாதாள அறையும் (Vyas Tehkhana) மசூதியில் ஒரு பகுதியாக இருப்பதால் அது தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பாதாள அறையில் பூஜை செய்து வரும் வியாஸ் குடும்பத்திற்கோ அல்லது வேறு யாருக்கும் அங்கு வழிபட உரிமை இல்லை" என மசூதி கமிட்டி வாதிட்டது.

இதற்கு எதிராக வாதிட்ட இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் மற்றும் விஷ்ணு சங்கர் ஜெயின், "தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதை நிறுத்தவே இல்லை. 1993ஆம் ஆண்டு, பாதாள அறையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகும், பூஜை செய்வது தொடர்ந்துள்ளது" என்றார்கள்.

கடந்த 1993ஆம் ஆண்டு வரை, தெற்கு பாதாள அறையில் மத சடங்குகளை வியாஸ் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாநில அரசின் உத்தரவுக்கு இணங்க, அதன் பிறகு அங்கு மத சடங்குகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link