மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யு.பி. ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. அந்த வகையில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை வீராங்கனை சஜீவன் சஜனா கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

குஜராத் ஜெயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ்:

இந்நிலையில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 3 வது லீக் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பெத் மூனி மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் களம் இறங்கினார்கள். 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற வேதா கிருஷ்ணமூர்த்தி டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் களம் இறங்கிய ஹர்லீன் தியோல், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தயாளன் ஹேமலதா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 7. 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரளவிற்கு அந்த அணிக்கு ரன்களை சேர்த்த தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனி 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் பந்தில் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது களம் இறங்கிய சினே ராணா டக் அவுட் முறையில் விக்கெட்டானார். இதனிடையே கேத்ரின் எம்மா பிரைஸ் சிறப்பாக விளையாடி வந்தார்.அவருடன் ஜோடி சேர்ந்த தனுஜா கன்வரும் அதிரடி ஆட்டம் ஆடினார்.

அந்த வகையில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் மும்பை அணி வீராங்கனை அமெலியா கெர் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர்:

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய யஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதில், 18 பந்துகள் களத்தில் நின்ற நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 22 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அமெலியா கெர் உடன் ஜோடி சேர்ந்தார் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர். இருவரின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன் அணி ரன் உயர்ந்தது. அதன்படி, அமெலியா கெர் 31 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க கடைசி வரை களத்தில் நின்ற ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை அணியை வெற்றி பெற செய்தார். 41 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்களை குவித்தார். இவ்வாறாக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை சுவைத்துள்ளது மும்பை அணி.