தொழில்நுட்ப உலகில் கோலோச்சி வரும், கூகுள் நிறுவனமானது, கூகுள் தேடு பொறி, யூ டியூப், ஜிபே உள்ளிட்டவைகளில் வல்லமை படைத்ததாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், சி.இ.ஓ. சுந்தர் பிச்சைக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ளது.
சாட் – சிபிடி:
கடந்த 2022 ஆம் ஆண்டு, கூகுளுக்கு சவால் விடும் வகையில் ஓப்பன் ஏஐ நிறுவனம், சேட் ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூகுள் நிறுவனம் பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. பார்டு தொழில்நுட்பம், மேலும் வலுப்படுத்தப்பட்டு, ஜெமினி ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை அறிமுகப்படுத்தியது.
தொழில்நுட்ப கோளாறு:
ஆனால் ஜெமினி ஏஐ எனும் சேட்பாட் தொழில்நுட்பமானது, சரிவர தெளிவான விடையை கொடுப்பதில்லை என சில பயனர்கள் கருத்து தெரிவித்தனர். புகைப்படங்களை உருவாக்கும் இமேஜ் ஜெனரேசனில் தெளிவான புகைப்படம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெமினி ஏஐ பிரிட்டன் இளவரசர், போப் ஆண்டவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களை சர்ச்சைக்குரிய வகைகளில் உருவாக்கியதாகவும் சிலர் தெரிவித்தனர். இன ரீதியான பாகுபாடு இருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்க ஆரம்பித்தனர்.
இது போன்ற பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் என கூகுள் தெரிவித்தது. சில மாதங்களுக்கு முன்பு, செலவினங்களை குறைப்பதற்காக வேலைநீக்கம் உள்ளிட்டவைகளை கையாண்டதால் சுந்தர் பிச்சை விமர்சனங்களுக்கு உள்ளானார்.
”பதவி விலக வேண்டும்”:
இதையடுத்து, கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் மிகவும் சரிவை சந்தித்தன. இதையடுத்து, பலரும் கூகுள் நிறுவனம் குறித்தும் சி.இ. ஓ. சுந்தர் பிச்சை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு, பயனாளர் ஒருவர் ஜெமினி ஏஐ-ல் மோடி ஒரு பாசிசவாதியா? என கேட்டார். அதற்கு, ஆம் அவரது செயல்பாடுகளை வைத்து பார்க்கையில் பாசிசவாதி என தெரிவித்தது.
இதையடுத்து, ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கூகுள் ஜெமினியின் ஐ.டி. சட்டங்களை மீறுகிறது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு, கூகுள் இணை நிறுவனரான செர்ஜி பெரின் மன்னிப்பு கோரினார். சில தொழில்நுட்ப கோளாறுகளால், பிழை நிகழ்ந்துவிட்டது என தெரிவித்தார்.
இந்நிலையில் ஜெமினி செயற்கை தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளால், நிறுவனத்தின் பங்கு வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவுள்ள சுந்தர் பிச்சை பதவி விலக வேண்டும் என பலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். ஓப்பன ஏஐ நிறுவனத்தின் நிறுவனத்தைச் சேர்ந்த அரவிந்த் சீனிவாஸ், கூகுள் நிறுவனம் சிறப்பாக இயங்க வேண்டுமெனில் சுந்தர் பிச்சை தனது பதவியை விட்டு விலக வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் காண