நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட் (The GOAT – Greatest Of All Time). பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
கௌரவக் கதாபாத்திரம்
சைன்ஸ் ஃபிக்ஷன் பாணியில் டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, இந்நிலையில் இப்படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன, அதன்படி கோலிவுட்டில் விஜய்க்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா (Trisha) இப்படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளாராம்.
முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங்கில் த்ரிஷா கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், த்ரிஷா இப்படத்தில் கௌரவக் கதாபாத்திரத்தில் தோன்றுவதாகவும், ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து நடனமாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யுடன் 6ஆவது படம்
ஏற்கெனவே திருப்பாச்சி, கில்லி, ஆதி, குருவி மற்றும் சென்ற ஆண்டு வெளியான லியோ ஆகிய படங்களில் விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்த நிலையில், அடுத்ததாக லியோ 2 திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே தற்போது தி கோட் படத்தில் விஜய் – த்ரிஷா ஜோடி இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொருபுறம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் தடம்பதித்துள்ள நிலையில், தான் கமிட்டாகியுள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே விஜய் அறிவித்து விட்டார். விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகும் ‘தளபதி 69’ திரைப்படத்தினை யார் இயக்கபோகிறார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வரும் நிலையில், ஹெச். வினோத், கார்த்திக் சுப்பராஜ் உள்பட பலரது பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
பிரபுதேவா – விஜய்யின் கலக்கல் டான்ஸ்
இந்நிலையில், விஜய்யின் தி கோட் திரைப்படம் குறித்த இந்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் போக்கிரி திரைப்படத்துக்குப் பிறகு பிரபுதேவா – விஜய் இணைந்து ஒரு முழு நீள பாடலில் நடனமாடியுள்ளதாகவும், நடனத்தில் கலக்கும் நடிகர் பிரசாந்தும் இந்தப் பாடலில் உற்சாகமாக நடனமாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் விஜய் நடிக்கும் இரட்டைக் கதாபாத்திரங்கள் முன்னதாக தந்தை – மகன் கதாபாத்திரங்கள் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது இவற்றில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என்றும் , பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட இப்படத்தில் எந்தக் கதாபாத்திரம் எந்த விஜய்க்கு துணையாக நிற்கும் என்பது பெரும் சர்ப்ரைஸாக அமையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காண