ACTP news

Asian Correspondents Team Publisher

Farmers Protest: குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக மத்திய அரசு தந்த வாக்குறுதி


Farmers Protest: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு வாரமாக மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை முற்றுகையிடும் நோக்கில், பஞ்சாப் மற்றும் ஹரியான எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர். போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சேர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைவதை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிலர் படுகாயமடைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் தான், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
மத்திய அரசு சொன்ன ஆலோசனை:
சண்டிகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை வாங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாயிகளை சந்தித்த அவர், உத்தேச கொள்முதலுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகளுடன் அரசு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் என்றும் கொள்முதல் அளவுக்கு வரம்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாய சங்கங்கள் ஆலோசனை: 
இந்நிலையில்,  தங்களது இதர கோரிக்கைகள் மீதான முடிவு நிலுவையில் உள்ளதால், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான, மத்திய அரசின் பரிந்துரை தொடர்பாக தாங்கள் கலந்தாலோசிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்மதம் தெரிவித்தால், என்.சி.சி.எஃப் (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) போன்ற கூட்டுறவு சங்கங்கள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளுடன் குறைந்தபட்ச ஆதார விலையில் பயிரை வாங்க ஒப்பந்தம் செய்யும். இது,  பயிர்களின் விலையில் கடுமையான வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்கும். இது ஒரு பாதுகாப்பு வலையாக செயல்படுகிறது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகளைத் தடுக்கிறது.
அதேநேரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் போராட்டத்தின் போது அவர்கள் மீது போடப்பட்ட போலீஸ் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற மற்ற கோரிக்கைகளை தீர்க்காவிட்டால், 21ம் தேதி முதல் மீண்டும் டெல்லி நோக்கி செல்லும் போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
 

மேலும் காண

Source link