சத்தீஸ்கரில் பயங்கர துப்பாக்கிச்சண்டை… 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் பாரிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள பிடியா கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப்படையினர் வருவதை அறிந்த நக்சல்பாரிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்த‍து. இந்த மோதலில், 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டுள்ள பாதுகாப்படையினர், மற்ற நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் யாருக்கம் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளின் ஒடுக்குமுறை கணிசமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதி, மாநிலத்தின் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 29 நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டாலும், பெரும் எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரின் மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் குறித்து தெரிவித்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், பிஜப்பூர் மாவட்டம் கங்களூர் பகுதியில் நக்சல்களுடன் நடந்த என்கவுன்ட்டரில், 12 நக்சல்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். பாதுகாப்புப்படையினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.